×

திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு

 

திருப்போரூர், நவ.5: திருப்போரூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் திருப்போரூர், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன. இவற்றில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஏராளமான வீட்டு மனைப்பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

இதன் காரணமாக மக்கள் தொகை பெருக்கம் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இந்நிலையில், திருப்போரூர் நகரப் பகுதியில் நான்கு மாடவீதிகள், திருவஞ்சாவடி தெரு, வணிகர் தெரு, சான்றோர் வீதி, கச்சேரி சந்து தெரு, அய்யம்பேட்டை தெரு உள்ளிட்ட முக்கிய தெருக்களில் தெரு நாய்கள் கடந்த சில வருடங்களாக எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தெரு நாய்களுக்கு உணவு அளித்தல், பிஸ்கட் போடுதல் போன்ற பணியில் சிலர் நல்ல எண்ணத்துடன் ஈடுபடுவதால் இவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.

இவை பிரதான சாலையையொட்டிய தெருக்களிலேயே ஆங்காங்கே வசித்து ஏராளமான குட்டிகளை போடுகின்றன. இந்த தெரு நாய்கள் போடும் குட்டிகள் அவ்வழியே செல்லும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், மார்க்கெட் பகுதியில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகளை அப்படியே உண்பதால் தெரு நாய்களின் தோலின் மீதுள்ள முடிகள் கொட்டி அருவெறுப்பாக காட்சி அளிக்கின்றன.

இதன் காரணமாக மற்ற நாய்களுக்கும் இந்த நோய் பரவி பேரூராட்சியில் வசிக்கும் மக்களுக்கும் தோல் நோய் உருவாக பெரும் காரணமாக உள்ளது. ஆகவே, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரு நாய்களை பிடித்து இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், கால்நடைத்துறை மற்றும் புளூ கிராஸ் உதவியுடன் நோய் பாதித்த நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post திருப்போரூர் பேரூராட்சியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppurur ,Tirupporur ,Tiruporur Municipality ,Chengalpattu District ,Tiruporur ,Kannagapattu ,Kalavakkam.… ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம்