ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ராக்காச்சி அம்மன் கோயில் நீரோடை வெள்ளத்தில் சிக்கிய 100 பேரை வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர். நீர்வரத்து சீராகும் வரை நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் நீரோடை உள்ளது. இந்த நீரோடையில் நீர்வரத்து இருக்கும். கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் நீரோடைகளில் குளித்து மகிழ்வர். இந்நிலையில், தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான பொதுமக்கள் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
இவர்கள் கோயில் அருகே உள்ள நீரோடையில் குளித்துக் கொண்டிருந்தபோது, மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் நீரோடையில் திடீரென காற்றாட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி கரையேர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, நீரோடையில் சிக்கி தவித்த 100க்கும் மேற்பட்டோரை கயிறு கட்டி மீட்டனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பினர்.
இதையடுத்து வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின் பேரில், ராக்காச்சி அம்மன் கோயில் நீரோடையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீரோடைக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க பேரிகார்டு அமைத்து, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீரோடையில் நீர்வரத்து குறைந்தவுடன் பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய 100 பேர் மீட்பு: பொதுமக்கள் குளிப்பதற்கு தடை appeared first on Dinakaran.