இந்த விண்கலன்களுடன் 24 ஆய்வு கருவிகளை கொண்டு புவி வட்ட ஆய்வு தொகுப்பையும் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இந்த தொகுப்பில் இஸ்ரோவின் 14 ஆய்வு கருவிகளும், தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களின் 10 ஆய்வு கருவிகளும் உள்ளது. ஸ்பேட்எக்ஸ் விண்கலன்கள் பூமியில் இருந்து 475 கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தப்பட்ட நிலையில் ஆய்வு தொகுப்பு பூமியில் இருந்து 350 கி.மீ தூரத்தில் புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அன்றைய தினமே ஆய்வுகருவிகளும் அதற்கான குறிப்பிடப்பட்ட பணிகளை தொடங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த ஆய்வு கருவிகளில் வாக்கிங் ரோபாட்டிக் ஆர்ம் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளதாகவும், மேலும் கிராப்ஸ்(CROPS) ஆய்வுக்கருவியிலும் விதைகள் 4 நாட்களில் துளிர்விட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆராய்ச்சி கருவி கிராப்ஸ் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டது, வேற்று கிரக சூழலில் தாவரங்களை வளர்ப்பதற்கும் அவை நிலைத்து இருப்பதற்குமான திறன்களை மேம்படுத்துவதற்கும் இந்த ஆய்வு கருவி ஒரு தளமாக செயல்படும். இது முழு தானியங்கி அமைப்பாக வடிவமைக்கப்பட்டு, நுண் புவியீர்ப்புச் சூழலில் விதைகள் துளிர்விடவும், அந்த விதைகளில் முளைத்த இரு இலைகள் 5 முதல் 7 நாள் வரை உயிர்ப்புடன் உள்ளதா என்பதை அறிய இந்த சோதனை திட்டமிடப்பட்டது.
இந்த கருவியில் ஒரு மூடப்பட்ட பெட்டியில் எட்டு காராமணி விதைகளை வெப்பக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க திட்டமிட்டது. மேலும் இதில் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு செறிவுகள், சுற்றுப்புற ஈரப்பதம் , வெப்பநிலை மற்றும் மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றின் கண்காணிப்பு உடன் தாவர வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஆய்வுகருவிகள் நிலை நிறுத்தப்பட்ட 4 நாட்களில் காராமணி விதைகள் துளிர்விட்டுள்ளது. இந்த விதைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இஸ்ரோவின் செயலற்ற அமைப்புகள் அலகால் உருவாக்கப்பட்ட வாக்கிங் ரோபாட்டிக் ஆர்ம், விண்வெளியில் நகரக்கூடிய திறன் கொண்ட இந்தியாவின் முதல் விண்வெளி ரோபாட்டிக் கையாகும்.
இந்த கருவி புவி வட்ட ஆய்வு தொகுப்பின் மேல் குறிப்பிடப்பட்ட இடைவெளியில் ஒரு புழுவின் அங்குல அளவு நகர்ந்து மீண்டும் அதே இடத்தை வந்தடையும் விதமாக சோதனை செய்யப்படவுள்ளது. இந்தச் சோதனையானது, ரோபாட்டிக் இணைப்புகள் மற்றும் கைக் கட்டுப்பாடுகள், ஆற்றல் மற்றும் தரவு பரிமாற்றம், கேமராக்களின் செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட மென்பொருள் கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி சுற்றுப்பாதையில் பெரிய பணியிடங்களை கட்டமைக்க உதவும். விழிப்புணர்வு இயக்க திட்டமிடல் மற்றும் உயர்-கணினி செயலியில் பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சோதனையானது இந்தியாவின் விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தின் சில ரோபோ தொழில்நுட்பங்களுக்கு முன்னோடியாக செயல்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை ரோபாட்டிக் கைகள் செயல்பட தொடங்கின விதைகளும் துளிர்விட்டன: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.