காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் ரூ.4.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் திட்டம்

திருச்சி : முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான மீன் குஞ்சுகள் விடும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் நேற்று தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு ஆறுகளில் நன்னீர் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்தல் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மொத்தம் 4.50 லட்சம் மீன்குஞ்சு பெருவிரலிகள் இருப்பு செய்யப்பட்டது.

மேலும், இத்திட்டமானது நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணையில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன் குஞ்சுகள் பெருவிரலிகளாக வளர்க்கப்பட்டு மொத்தம் 4.50 இலட்சம் மீன்குஞ்சு பெருவிரலிகள் திருச்சி மாவட்டத்தில் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருப்பு செய்யப்பட்டது.

ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும், ஆறுகளின் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை நிலைநிறுத்திடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும் பயன்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், ரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் (திருச்சி மண்டலம்) ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் குமரேசன், ஆய்வாளா்கள் பாஸ்கா், கௌதம், வீரமணிமாருதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

The post காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் ரூ.4.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: