ஜிலேபி, லட்டு, அல்வா என்று அசத்தல் சேலம் மத்திய சிறை கைதிகள் தயாரித்த இனிப்புகள் விற்பனை

சேலம் : சேலம் மத்திய சிறையில் தீபாவளி பண்டிகையையொட்டி கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மத்திய சிறையில் 1200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதுடன், உள்ளேயே வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனைக்கு தேவையான கட்டில் செய்யும் தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் பிரட்டும் இங்கு தான் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் சிறையில் செயல்பட்டு வரும் சிறைச்சந்தை மூலமாக கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு வகைகளும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

சேலம் சிறையில் 20 கைதிகள் சமையல் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களைக் கொண்டு மிக்சர், காரசேவ், ஜிலேபி, பாதுஷா, லட்டு, அல்வா, மைசூர்பாகு ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிறையின் வெளிப்பகுதியில் கைதிகளுக்கான மனு எழுதும் அறையின் அருகில் இனிப்பு வகைகள் விற்பனையை சிறை கண்காணிப்பாளர் வினோத், நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சிறைக்கைதிகளுக்கு சமையல் கலை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளனர். இது போன்ற பயிற்சிகள் கைதிகளின் மனஅழுத்தத்தை குறைத்து நம்பிக்கையை உருவாக்குகிறது. விடுதலையாகி வெளியே சென்றாலும் வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறது.

தற்போது தீபாவளியையொட்டி கைதிகள் தயாரித்த இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டை விட தரமானதாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,’’என்றார்.

The post ஜிலேபி, லட்டு, அல்வா என்று அசத்தல் சேலம் மத்திய சிறை கைதிகள் தயாரித்த இனிப்புகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: