இன்று தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு நாடு முழுவதும் மக்கள் தயாராகி வருகின்றனர். இதில் இந்தியாவை பொறுத்தவரை தீபாவளி மட்டுமன்றி பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், தசரா என்று ஏராளமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போன்ற பண்டிகை கொண்டாட்டங்கள் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து சகோதரத்துவத்தையும் உணர்த்தி வருகிறது.
இது ஒரு புறமிருக்க தனிப்பட்டவர்களின் மகிழ்ச்சி, குடும்பத்தின் களிப்பு, சமுதாயத்தின் குதூகலம் என்ற மூன்றையும் ஒன்றாக இணைப்பதே திருவிழாக்கள் என்னும் பண்டிகைகளின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கூற்று. இந்தவகையில் மக்களால் மக்களுக்காக கொண்டாடப்படும் திருவிழாக்கள், சமுதாய ஒருமைப்பாட்டிற்கும், சமூக நடைமுறைகளுக்கும் ஒரு அடித்தளமாகவும் அமைகிறது. மனிதனின் செயல் ஒவ்வொன்றும் முக்கியமான வாழ்வியல் காரணங்களை கொண்டது. குறிக்கோள்களையும் இலக்காக கொண்டது.
அந்தவகையில் திருவிழாக்கள் என்பது உழைக்கும் மக்களின் துன்பங்களை போக்குகிறது. இன்பத்தையும், புத்துணர்வையும் அளிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிலும் முக்கியமாக இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பது மனிதர்களுக்கு புத்துணர்வு அளித்து உடல்நலத்தோடு, மனநலத்தையும் பாதுகாக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து மனநலம் சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது: உலகளவில் பல்வேறு நாடுகள் பல்வேறு பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.
இதில் இந்தியாவை பொறுத்தவரை பண்டிகைகளின் பூமி என்றே அழைக்கப்படுகிறது. பல்வேறு மதங்கள் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட நாடு இந்தியா. இங்கு வடக்கு, ெதற்கு, கிழக்கு, மேற்கு என்று வித்தியாசம் இல்லை. பெரும்பாலான பண்டிகைகளை மக்கள் இணைந்தே கொண்டாடுகின்றனர். இது மட்டுமன்றி இந்தியர்கள் உலகின் எந்த பகுதியில் வசித்தாலும் தங்கள் பண்டிகையை ஒரே பக்தியுடன் கொண்டாடுவது வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு.
இந்தியாவில் இனங்கள், மொழிகள், மதங்கள் பல்வேறாக இருந்தாலும் ஒருவரின் பண்டிகையில் மற்றொருவர் பங்கேற்பதும் தனித்துவமாக உள்ளது.ஒருபுறத்தில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, சமூக ஒற்றுமைக்கு தொடர்ந்து உரமூட்டும் பண்டிகைகள், மனிதர்களின் மனநலம், உடல்நலத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.
அதாவது பண்டிகை நாட்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிகநேரம் இணைந்திருக்க வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் பேசும் வாய்ப்பும் கிடைக்கும். அனைவரும் ஒரு யூனிட்டாக இணைந்திருக்கும் போது, நம்மை சுற்றி மிகப்பெரிய ஆதரவு கூட்டம் இருப்பது போன்ற சூழல் மனதில் உருவாகும். இது மட்டுமன்றி பண்டிகை நாட்களில் மகிழ்ச்சி, கொண்டாட்டம், உபசரிப்பு என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கும்.
முடிந்தவரை எதிர்மறை பேச்சுக்கள் பேசுவதை அனைவரும் அன்றைய தினம் தவிர்த்து விடுவர். இதுபோன்ற சூழல் இயல்பாகவே ஒரு மனிதருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். இது நமது உடலில் எண்டோர்பின்கள் என்னும் ஹார்மோன்களை வெளியிடும். இந்த ஹார்மோன்கள் மனச்சோர்வை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. இந்தியாவை பொறுத்தவரை மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஒற்றுமை என்ற மூன்றையும் முக்கிய இலக்காக கொண்டது பண்டிகைகள்.
இது மனநலம் பாதித்தவர்களுக்கு பெரும்பாலும் நன்மைகளையே தருகிறது. அவர்கள் அடிக்கடி அனுபவிக்கும் ஏகபோகத்தை உடைக்க ஒரு வாய்ப்பாக அமைகிறது. தனிநபர்கள் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க உதவுகிறது. இது மனதை தளர்த்தி மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. இந்த வகையில் பண்டிகை கொண்டாட்டங்கள் மனிதர்களின் உடலோடு, மனநலத்திற்கும் பெரும் வலுவை சேர்க்கிறது. மனரீதியாக மட்டுமன்றி சமூக ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் நம்மை மேம்படுத்துகிறது.
ஒருநாள் பண்டிகை கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியான நினைவுகளை மனதில் வைத்து ெசயல்பட்டால் ஆண்டு முழுவதும் நமக்கும் பெரும் நன்மை சேர்க்கும் என்பதும் உண்மை. இதை உணர்ந்து நமது பண்டிகை கொண்டாடங்கள் தொடர வேண்டும். இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்.
உலகளவில் 5வது இடம்
‘‘உலகளவில் அதிக பண்டிகைகள் கொண்டாடும் நாடுகள் குறித்த பட்டியலை சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது. அந்தநாட்டின் பொதுவிடுமுறை நாட்களை கணக்கிட்டு அதிக பண்டிகை கொண்டாடும் நாடுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் உலகளவில் நேபாளம் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்து கம்போடியா, இலங்கை, மியான்மர் நாடுகள் இடம் பெற்றுள்ளது.
இதற்கடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. அதாவது பொதுவிடுமுறை தினங்கள் அதிகம் என்ற ரீதியில் பண்டிகை கொண்டாட்டம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கடுத்த இடத்தில் கஜகஸ்தான், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், டிரினிடாட் மற்றும் டெபோகோ, சீனா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன,’’ என்பது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரத்தால் வரும் புத்துணர்வு
‘‘வழக்கமான நாட்களை விட பண்டிகை நாட்களில் நமது மக்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்தியாவை ெபாறுத்தவரை பண்டிகை என்றாலே, முதலில் சுத்தமாவது வீடுகளும் தெருக்களும் தான்.
இதில் குப்பைகளை அகற்றுதல், பயன்படாத பொருட்களை அகற்றுதல், தளவாவடங்களை மறுசீரமைத்தல், வீட்டை புதுப்பித்தல் என்று பல்வேறு செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த செயலானது இயல்பாகவே தெளிவு மற்றும் புதியஉணர்வை தருகிறது. இந்த தெளிவும், புதிய உணர்வும் மனநலத்திற்கும் பெரும் வலுவை கொடுக்கிறது,’’ என்பதும் உளவியல் வல்லுநர்கள் கூறும் தகவல்.
ஒவ்வொன்றுக்கும் பாசிட்டிவ் எனர்ஜி
நமது நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு ‘பாசிட்டிவ் எனர்ஜி’ உள்ளது. உதாரணமாக தீபாவளியை எடுத்துக் கொண்டால் விளக்குகளின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விளக்குகளை ஏற்றுவதும், வீடுகளை அலங்கரிப்பதும் அரவணைப்பு மற்றும் நேர்மறை உணர்வை கொண்டு வரும்.
ஒன்பது நாள் நடக்கும் நவராத்திரிவிழாவானது நடனம் மற்றும் பிரார்த்தனைக்கான வாய்ப்பை வழங்குகிறது. இவை இரண்டும் மனஆரோக்கியத்தில் மற்றொரு சிறப்பு அடித்தளமாக அமைகிறது. பொங்கல் இயற்கையுடன் நமக்குரிய தொடர்பை உணர்த்துகிறது. இப்படி ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உள்ளது என்கின்றனர் திருவிழாக்கள் குறித்த ஆய்வு வல்லுநர்கள்.
The post மகிழ்ச்சியால் சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் உடலும், மனமும் வலுவடைகிறது உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள் appeared first on Dinakaran.