கசனின் குருபக்தி

பகுதி 2

“கசனை உயிர்ப்பிக்க வேண்டும், அவர் இல்லை என்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று கதறி அழுதாள். தன் மகளின் அழுகையை காணப்பிடிக்காமல், மறுபடியும் கசன் உடல் ஒன்றுசேர, மிருத சஞ்சீவினியைப் பயன்படுத்தினார். ஆற்றில் கரைந்த கூழ், உடலாகி உயிர் பெற்றது. கசன் வீடு திரும்பினான். “மகளே! உனக்காக இருமுறையும் செய்துவிட்டேன். அடுத்த முறை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அவனுடைய ஆயுள் அவ்வளவுதான்” என்று கூறிவிட்டுச் சென்றார். கசன், தேவயானியின் அன்பைப்பார்த்து, அவளுக்கு நன்றியைத் தெரிவித்தான்.

கசனின் பதற்றம்

தேவயானி, கசன்மீது கொண்ட காதல் ரகசியத்தை அவனிடம் வெளிப்படுத்தினாள். அதைக் கேட்டு பதறிய கசன் “தேவயானி.. நான் அவ்வாறு, தவறான கண்ணோட்டத்தில் உன்னைப் பார்க்கவில்லை, என்பதை நீ அறிவாய். நான் உன்மீது காதல்கொள்ளவில்லை. நீ என் குருவின் மகள். என் சகோதரியைப் போன்றவள்” என்று அவளுக்கு எடுத்துக் கூறினார். ஆனால், அவள் பிடிவாதமாக உன்னைத்தான் மணப்பேன் என உறுதியாக நின்றாள். அவன் அவ்விடம் விட்டு அகன்றான். காலங்கள் சென்றன. அசுரர்களுக்கு இவனுடைய நிலையைக் காண்கின்ற பொழுது கோபமும் எரிச்சல்களும் ஆகினர்.

அதனால், அசுரர்கள் மறுபடியும் ஒரு திட்டத்தை தீட்டினர். துண்டுகளாக்கி வீசினாலோ அல்லது கூழாக்கினாலும் கசன் உயிர்பித்துவிடுகிறான். இதற்கு மாறாக ஒன்று நாம் செய்வோம். இம்முறை நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம் எனக் கூறி மகிழ்ந்து சோமபானத்தை அருந்தினர்.

வாதாபி நீ ஜீரணாபி
ஓர் அசுரன், “எனக்கு யோசனை தோன்றுகிறது, “வாதாபி நீ ஜுரணாபி’’
எப்படி… என்றதும்;
“பலே! பலே! உன்னுடைய யோசனை புரிந்துவிட்டது. நாம் செய்வோம். நிச்சயம் அவன் ஆயுள் முடிந்துவிடும்’’ எனக் கூறிச் சிரித்தார். அதனை அனைவரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டனர். அன்று பூஜைக்காக மலர்களை பறித்தான் கசன். அசுரர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய உடலை எரித்து சாம்பலாக்கி, சோமபானத்தில் கலந்து சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தான். அவரும் பேசிக் கொண்டே சூட்சுமம் அறியாமல் குடித்துவிட்டார். மதுவோடு சேர்ந்து கசன், வயிற்றின் உள்ளே சென்றான். அதன் பின்பாக நடந்தது அத்தனையும் அல்லோ மயமே.

தேவயானி, கசன் இல்லாமல் அழுதாள். தன் தந்தையிடம் இருமுறை கூறியது போல மூன்றாவது முறையும் சொன்னாள். சுக்ராச்சாரியார், தன்னால் நிச்சயமாக கசனை மீட்டெடுக்க மிருத சஞ்சீவினி வித்தையை பயன்படுத்த முடியாது என்றும், “ஒருவனுக்கு எவ்வளவு ஆயுள் உண்டோ அதுதான் நடக்கும் ஆகவே, நீ இத்தோடும் அவனை மறந்துவிடுவதுதான் சிறப்பு” என எடுத்து அறிவுரை கூறினார்.

சுக்ராச்சாரியார் மாண்டாரா?

தேவயானி, “அதெல்லாம் முடியாது அவன் இல்லாமல் என்னால் வாழவே இயலாது’’ என அழுது புரண்டாள். மகளின் பிடிவாதம் தாங்க முடியாமல். அவன் எங்கே சென்றிருக்கிறான் தெரியவில்லையே என அதிர்ச்சி அடைந்தார். ஒரு கட்டத்தில் உண்மையை தெரிந்துகொண்டார், சுக்ராச்சாரியார். எல்லாவற்றையும் தன் மகளிடத்தில் எடுத்துக் கூறினார். “கசன், என் வயிற்றில் இருந்து வெளியே வந்தால், தான் இறந்து விடுவேன்.’’ என்பதை மகளிடம் கூறியும், மகளோ; “அதெல்லாம் எனக்குத் தெரியாது, கசன் வெளியே வந்தே ஆக வேண்டும்” என அடம்பிடித்தாள்.
சுக்ராச்சாரியார், “மகளே! நான் இறந்தாலும் கசன் உயிரோடு வேண்டுமா?” என்று வருத்தத்தோடுக் கேட்டார். சற்று நேரம் அமைதியானவள்;
“அவன் நல்லவன் நிச்சயமாக அவன் வரவேண்டும்” என்று உறுதியாகக் கூறினாள். மகளின், தந்திரத்தை அறிந்த சுக்ராச்சாரியார் மெதுவாகச் சிரித்தார்.

“மகளே! நீ ஜெயித்துவிட்டாய். வந்தவனும் ஜெயித்துவிட்டான்”. எனக்கூறி தன்னுள்ளே வயிற்றில் இருக்கின்ற கசனை பார்த்து;
“கசனா! நீ வென்றுவிட்டாய். நான் உனக்கு மிருத சஞ்சீவினி வித்தையை கற்பிக்கின்றேன். அதை கற்றுக்கொண்டு,

நீ வெளியே வரவேண்டும்” என்று கூறினார். அவ்வாறே, மந்திரத்தைக் கூற, கசன், சுக்ராச்சாரியாருடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே உயிருடன் வந்து விழுந்தான். அதன் பின்பு, குரு கற்பித்த மந்திர வித்தையைப் பயன்படுத்தி, இறந்த சுக்ராச்சாரியாரை மீண்டும் உயிர்த்தெழச் செய்தான். குருபக்தி வென்றது. தேவயானி உண்மையான காதல் கொண்ட அன்பானது அவனை உயிர்த் தெழச்செய்தது. அந்த வித்தையைக் கற்றுக்கொண்டவன், அவரிடத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றி, பின்பு அவருடைய அனுமதியோடு தேவலோகம் செல்ல இருந்தான். ஆனால், நிலை வேறு விதமாக மாறியது. மீண்டும், தன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினாள் தேவயானி.

தேவயானி கொடுத்த சாபம்

“தங்களின் கண்மூடித்தனமான காதல் தவறு, ஏனென்றால் நான் உன்னுடைய தந்தையின் உடலில் இருந்து தோன்றியதனால், நான் சுக்ராச்சாரியாரின் மகன் ஆவேன். முன்பு குரு மகளான சகோதரி. ஆனால், இப்போது நீ எனக்கு ரத்த பந்தம் உடைய உடன் பிறந்த சகோதரி. ஆகையால், என்னை நீ மணந்து கொள்ள முடியாது” எனக் கூறிவிட்டு அவன் தேவேந்திரலோகம் கிளம்பினான்.

“கசனே, நீ எனக்குத் துரோகம் செய்தாய். நீ கற்க வேண்டும் என நினைத்து வந்ததை சாதித்துவிட்டாய். இந்த கனி உனக்கு உபயோகப்படாது” எனச் சாபத்தை கொடுத்தாள் தேவயானி.

தேவயானிக்கு, கசன் கொடுத்த சாபம்

கசனும், திருப்பி புன்னகை புரிந்து தேவயானியை நோக்கி, “அக்கனி எனக்குப் பயன்படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. தேவர்களுக்குக் கற்பிப்பேன் ஆனால், ஒரு முனிவரைத்தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் உன்னை எந்த முனிவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்’’ எனச் சாபம் விடுத்துவிட்டு தேவலோகம் சென்றான். தன் குருவுக்குக் கொடுத்த வாக்கின்படி, உண்மையோடு நடந்துகொண்டான். கசன் ஒரு சிறந்த உன்னதமானவன்.

தொகுப்பு: பொன்முகரியன்

The post கசனின் குருபக்தி appeared first on Dinakaran.