தோற்றத்தைப் பார்த்து நியாயம் தீர்க்காதீர்கள்!

போதகர் ஒருவர் ரயிலில் பிரயாணமாக சென்றுகொண்டிருந்தார். அவர் பயணம் செய்த பெட்டியில் ஒரு தகப்பனும் அவரது இரண்டு சிறுபிள்ளைகளும் பயணித்து கொண்டிருந்தனர். சிறுபிள்ளைகள் இருவரும் ஓடுவதும் குதிப்பதுமாக மிகவும் சத்தமிட்டு விளையாடி கொண்டிருந்தனர். சக பயணிகளுக்கு இது
இடையூறாக இருந்தது.

பிள்ளைகளின் தகப்பன் எதுவும் காணாதவர் போல ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். பிள்ளைகள் கொடுத்த இடையூறில் எரிச்சலடைந்த போதகர் அந்த தகப்பனைப் பார்த்து வேத வசனம் ஒன்றைச் சுட்டிக்காட்டி விளக்கம் கொடுத்துவிட்டு, ‘‘பிள்ளைகளைக் கண்டிக்காமல் என்னய்யா பண்ற?’’ எனக் கேட்டார். அதற்கு அவர் மெதுவாக ‘‘ஐயா இப்பத்தான் என் மனைவியை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன். என் பிள்ளைகள் இப்பொழுதான் அதை மறந்து விளையாடுகிறார்கள். இப்போது கண்டித்தால் அவர்கள் மீண்டும் கலங்கிவிடுவார்கள்’’ என்று சொல்ல, போதகர் சொல்வதறியாது மன்னிப்பு கேட்டாராம்.

இறைமக்களே, முன்கோபம் மற்றும் எரிச்சல் இவ்விரண்டும் சற்று ஆபத்தானது. உண்மைச்சூழ்நிலையை நாம் உணராத வரையிலும் நாம் யாரையும் நியாயந்தீர்த்துவிடக் கூடாது. நீதி நியாயத்திற்காக போராடுவது நல்லது. அதே நேரம் உண்மைக் களநிலவரத்தை அறியாமல், உண்மையைத் தெரியாமல் பொறுமையின்றி நாவினை திறப்பது அநியாயமல்லவா?

‘‘நீங்கள் மாமிசத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்’’ (யோவா 8:15,16) என இயேசு கிறிஸ்து நம்மை எச்சரிக்கிறார்.

தேவனைப் போல நீதியை நிறைவேற்ற விரும்புகிற நாம் தேவனைப்போல பிறரை நேசிக்கிறோமா? மன்னிக்கிறோமா? நம்மை நாமே சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ‘‘மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.’’ (1 சாமு.16:7)

– அருள்முனைவர். பெ.பெவிஸ்டன்.

The post தோற்றத்தைப் பார்த்து நியாயம் தீர்க்காதீர்கள்! appeared first on Dinakaran.