கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் எனும் மகான், 1831-ஆம் வருடம் டிசம்பர் 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று அனுஷ நட்சத்திரம், ரிஷப லக்னத்தில் அமாவாசை நாளில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் யக்ஞேஸ்வர சாஸ்திரிகள் காமாட்சி அம்மாள் தம்பதி யின் இளைய மகனாக அவதரித்தார். சுந்தர சுவாமிகள் ஸ்ரீ அப்பய்ய தீட்சிதரவர்களின் பெண்வழி சந்ததியில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் அவதரித்தவராவார்.சுந்தர சுவாமிகளுக்கு ஐந்து வயதில் அட்சர அப்பியாசமும், ஏழு வயதில் உபநயனமும் நடைபெற்றது.
பத்தமடையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ண கனபாடிகளிடம் வேத அத்யாயனம் பயின்ற சுந்தர சுவாமிகள் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கினார். இவரது திறனைக் கண்டு வியந்து, மகிழ்ந்த அந்த ஊர்க்காரர்கள் பெருமையுடன் இவன் ஒரு தெய்வீகப் பிறவி! இப்படி ஒரு பிள்ளை நம் ஊரில் வளர்வதற்கு நாமெல்லாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டனராம்.சிவ பூஜை செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சுந்தர சுவாமிகள், தினமும் ஒரு லட்சம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜபித்து வந்தார்.
அடைச்சாணியில் விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் என்பவரிடம் மந்திர உபதேசம் பெற்று, குருவாகவும் ஏற்றார். பல திருத்தலங்களை ஏராள மான சீடர்களுடன் தரிசித்தார். செல்லும் இடமெல்லாம் புராண, இதிகாச உபன்யாசங்களின் மூலம் சிவபக்தியை வளர்த்தார். மந்திர பலத்தாலும் பக்தியாலும் பல அரிய காரியங்களைச்செய்தார். பத்தமடையில் ஒரு சமயம் யக்ஞேஸ் வரன் என்கிற 5 வயதுக் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது, அக்குழந்தையின் குடும்பமே துயரில் ஆழ்ந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தநிலையில், அங்கு வந்த சுந்தர சுவாமிகள் குழந்தையின் சடலத்தின் மீது மந்திர ஜலம் தெளித்து நெற்றியில் விபூதி பூசி சில ஸ்லோகங்களை கூறி சிவபிரானைத் துதிக்க அக்குழந்தை தூங்கி எழுவது போல் விழித்தெழுந்தது.
இதைக் கண்ட அக்குழந்தையின் பெற்றோர்கள் வணங்கி, புகழ்ந்து கொண்டாடினர்.இப்படி பல அருட்செயல்களை நடத்திய ஸ்வாமிகள் கோடகநல்லூர் தாமிரபரணிக் கரையோரத்தில் நெடுநெடுவென்று வளர்ந்திருக்கும் நாணல் புதர்களுக்குள் சென்று நிஷ்டையில் ஆழ்ந்திருப்பார். அவரது பக்தர்கள் நாணல் புதர்களிடையே தேடிச் சென்று உணவு அளிப்பர். ஒரு நாள் அன்ன ஆகாரம் எதுவும் இன்றி சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது, தன் பக்தனின் பசியைப் பொறுக்காத சிவபெருமான் அந்தணர் வடிவில் அன்னப் பாத்திரத்துடன் தோன்றி சுவாமிகளின் பசியாற்றி, சுந்தர சுவாமிகளுக்கு தரிசனம் தந்தருளியுள்ளார்.சுந்தர சுவாமிகள் தன் வாழ்நாளில் 22 கும்பாபிஷேகங்களை நடத்தி வைத்திருக்கிறார். அவர் நடத்திய முதல் கும்பாபிஷேகம் தன் சித்தி அடைந்த அரிமளத்தில் இருக்கும் கோயில்.
இறுதியில் நடத்திய கும்பாபிஷேகம் அவர் அவதரித்த கங்கைகொண்டானில் உள்ள கோவில்.சுவாமிகள் தான் சமாதி அடையும் நாள் நெருங்கி விட்டதை தமது சீடர்களிடம் தெரிவித்தார் வெகுதான்ய வருஷம் (கிபி 1878) ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் ஆறாம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ணபட்சம் தசமியன்று தமது மெய்யன்பர்கள் பலர் சூழ்ந்திருக்க அவர்களை அனுக்கிர ஹித்துவிட்டு தாம் வைத்திருந்த நர்மதா பாணலிங்கத்தை தமது அடியார்களிடம் கொடுத்து இது எங்கே பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அவ்விடத்தில் சிவபெருமானின் சாந்நித்யம் பரிபூரணமாய் இருக்கும். அங்கு தவமியற்றுபவர்களுக்கு விரைவில் இஷ்ட பலன் கிட்டும் என்று அருளி பிரம்ம ஸ்வரூபத்தில் கலந்தார்.
திருநெல்வேலி காந்திமதி அம்மன் தேர் 26.10.2024 சனி
திருநெல்வேலி தலம் விசேட சிறப்புடையது. அம்மை தான் படைத்த உலகத்தைக் காத்தற்பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றி. அவன் அருளை உலகம் பெறும்படிச் செய்தது வரலாறு. சிவபெருமானின் நிவேதனத்திற்காக வேதசா்மா எனும் அந்தணச்சான்றோர் பிச்சை எடுத்துவந்து உலா்த்தியிருந்த நெல்லை. எதிர்பாராது பெய்தமழை அடித்து சென்றுவிடுமோ என அஞ்சி இறைவனை இறைஞ்சிபோது. இறைவன் நெல்லை. நீா் அடித்துக்கொண்டு போகாமல் வேலியாக நின்று காத்தமையால் நெல்வேலி நாதா எனப்பெயா் பெற்றார். இத்திருவிளை யாடல் நடைபெற்ற இத்தலத்திற்கும் திருநெல்வேலி என்னும் பெயா் வந்தது. இத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் சிறப்புதான். அதில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவம் 15 தினங்கள் நடைபெறும். அதையொட்டி காந்திமதியம்மனுக்கு திருத்தேர் விழா நடைபெறும்.வீரவநல்லூர் மரகதாம்பிகை
திருவீதி உலா 27.10.2024 ஞாயிறு
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவியிலிருந்து சுமார் 7கி.மீ. தொலைவில் உள்ளது வீரவநல்லூர். வீடு கட்டத் தொடங்கும் முன் பூமிநாதரை வழிபட்டுத் தொடங்கினால் நல்ல முறையில் வீடு கட்டலாம் என்பது ஐதீகம். நிலம், வீடு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட சீராகும் என்பதும் நம்பிக்கை. முன்னொரு காலத்தில் மிருகண்டு முனிவருக்கு சிவன் ஆண் குழந்தை ஒன்றை வரமளித்தார். அக்குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தனர். சிவ வழிபாட்டில் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயனுக்கு அவனது ஜாதகத்தின்படி 16 வயதில் மரணம் என ஜோதிடர்கள் உரைக்கின்றனர்.
ஜாதகத்தில் உரைத்தபடி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதும் பிறந்தது. அன்று அவன் கோயிலினுள் உள்ள சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான். அவனது உயிரை எடுத்துச் செல்ல வந்த எமதூதர்கள் சிவ வழிபாட்டில் இருக்கும் அவனைக் கண்டு விலகி நின்றனர். இதனையறிந்த யமதர்மன், தானே மார்க்கண்டேயனின் உயிரை எடுக்கிறேன் என உரைத்து அவனை நெருங்கினான். இது கண்டு அஞ்சிய மார்க்கண்டேயன் தன் அருகிலிருந்த சிவலிங்கத்தை கட்டிய ணைத்துக்கொண்டான். யமதர்மன் எறிந்த பாசக்கயிறு மார்க்கண்டேயனுடனிருக்கும் சிவபெருமானையும் சேர்த்தே இழுத்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான், யமதர்மனை தன் காலால் எட்டி உதைத்தார். இதனால் மூர்ச்சையான யமன் சிறு கொடியாய் மாறி இந்த ஸ்தலத்தில் வந்து விழுந்தான் என்கிறது இக்கோயில் தலவரலாறு.
இதனால், யமனின் வேலை பாதிக்கப்பட்டது; பூமி பாரம் அதிகமாகியது. சிவபெருமான் பூமாதேவிக்கு உதவிட யமனுக்கு உயிர் தந்து, அண்டத்தின் பாரத்தைக் குறைத்தார். அதனால் இங்குள்ள ஈசன் பூமிநாதர் என்னும் நாமம் கொண்டு அழைக்கப்படுகிறார் என்கிறது தலவரலாறு. இத்தலத்தில் கிழக்கு நோக்கிய சந்நதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகிகள் காவல்புரிய, உள்ளே கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறுகரத்தை கீழே தொங்க விட்டபடியும், சற்றே இடைநெளித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தவளாய், நின்ற கோலத்தில், மரகதப் பச்சை நிறத்தவளாய் ஆனந்த காட்சியளிக்கிறாள் மரகதாம்பிகை. ஐப்பசி மாதம் அம்மன் சந்நதியில் கொடியேற்றமாகி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெறும். அந்த
உற்சவத்தில் இன்று அம்பிகை வீதிஉலா.
எம தீபம் 29.10.2024 செவ்வாய்
நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசையில் பூலோகத்துக்கு வருகின்றனர். அவர்களை நாம் வழிபட்டு அந்நாளில் திதி கொடுக்கிறோம். எமலோகத்தில் இருந்து வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்ல வழியும் வெளிச்சமும் காட்டுவது இந்த யம தீபம் என்கிறது சாஸ்திரம். யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும்.
தன்வந்திரி ஜெயந்தி 30.10.2024 புதன்கிழமை
தேவர்கள் அமுதம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது பலவிதமான பொருள்கள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டன. சாட்சாத் மகாவிஷ்ணுவே அமிர்த கலசத்துடன் பாற்கடலில் இருந்து வெளிப்பட்டார். உலகத்தவர்களின் நோயைக் குணப்படுத்தும் மருந்து மூலிகைகள் அவர் திருக்கரத்தில் இருந்தன. வேதம் “வைத்யோ நாராயண ஹரி:” (மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்) என்று சொல்வதால், அந்த பரமாத்மாவே தன்வந்திரி பகவானாக அவதரித்தான். அப்படி அவதரித்த நாள் ஐப்பசி மாதம் தேய்பிறை ஹஸ்த நட்சத்திரமும், திரயோதசி திதியும் கூடிய நாள் ஆகும். அந்த நாள் உலகெங்கும் தன்வந்திரி ஜயந்தி நாளாகக் (தேசிய ஆயுர்வேத தினம்) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தன்வந்திரி பகவானை நினைத்து, அவருடைய மந்திரத்தை பாராயணம் செய்து வணங்குவதன் மூலமாக, நாம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹா விஷ்ணவே நமஹ.
தீபாவளி மருந்தில் தன்வந்திரி பகவான் உறைகிறார். எனவே, தீபாவளி மருந்து உட்கொள்ளும்போது ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனபூர்வமாகப்
பிரார்த்திக்க வேண்டும்.
தீபாவளி 31.10.2024 வியாழன்
இன்று தீபாவளி. குரு வாரத்தில் வருவது சிறப்பு.
1. விடிகாலையில் எழுந்திருக்க வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்னாலே நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். வெந்நீரில் நீராட வேண்டும். இன்றைய காலை நீராட்டம் என்பது கங்கையில் புனித நீராடியதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
2. இயன்ற அளவு, வாசலில் ஆரம்பித்து, பூஜை அறை, கூடம், துளசி மாடம், சமையலறை என எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்ற வேண்டும். பஞ்சுதிரி போட்டு நல்லெண்ணெயில் தீபங்களை ஏற்ற வேண்டும். தீபங்கள் அனைத்தும் கிழக்கு நோக்கி இருப்பதாக அமைக்க வேண்டும்.
3. பகவானிடத்தில் வைத்துப் படைக்கப்பட்ட புத்தாடைகளை அணிய வேண்டும்.
4. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
5. தீபாவளி நோன்பு இருப்பவர்கள் விடாமல் முறையாகச் செய்ய வேண்டும்.
6. குடும்பத்தில் மனமகிழ்ச்சியுடன் குதூகலமாக, நல்ல மங்கலகரமான சொற்களைப் பேசி மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.
7. மாலையில் கலசத்தை வைத்து லட்சுமி குபேரபூஜையை செய்வது வீட்டில் உள்ள வறுமையை விரட்டும். குறைந்தபட்சம் மகாலட்சுமியோடு கூடிய மகாவிஷ்ணு படத்திற்கு மணமிக்க மலர் களைச் சாற்றி, அல்லது துளசிசரத்தை சாற்றி, மனம் உருகி பிரார்த்தனை செய்வது, வீட்டில் செல்வச் செழிப்பை
உண்டாக்கும்.
அமாவாசை 1.11.2024 வெள்ளி
இன்று ஐப்பசி மாத அமாவாசை. அமாவாசை விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தில தர்ப்பணம் செய்ய வேண்டிய நாள். இந்த அமாவாசை, சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை வருவதால் மிக விசேஷமானது. அமாவாசையில் விரதம் இருந்து வழிபட்டால் 14 பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்குவதுடன், நினைத்தது நடக்கும். பித்ருக்களை நினைத்து கண்டிப்பாக எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். இந்த நாளில் பித்ருக்களுக்கு உரிய காய்களான புடலங்காய், வாழைக்காய் ஆகியவற்றை கண்டிப்பாக சமையலில் சேர்த்து முன்னோர்களுக்கு படையலிட வேண்டும் குடும்ப ஒற்றுமை சிறக்க இந்த நாளில் அருகாமையில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபடலாம். இந்த அற்புதமான நாளில் முன்னோர்களை நினைத்து
விரதம் இருந்து வழிபடுவது என்பது நம் முடைய குடும்பத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு சுபத்தடைகளை விலக்கும்.
27.10.2024- ஞாயிற்றுக்கிழமை
தென்காசி ஸ்ரீஉலகம்மை திருவீதி விழா.
28.10.2024- திங்கட்கிழமை ஐப்பசி பூரம்.
28.10.2024- திங்கட்கிழமை சங்கரன் கோவில் கோமதி திருக்கல்யாணம்.
28.10.2024- திங்கட்கிழமை சர்வ ஏகாதசி.
29.10.2024-செவ்வாய்க்கிழமை தென்காசி கடையம் சிவன் கோயில்களில் திருக்கல்யாணம்.
29.10.2024-செவ்வாய்க்கிழமை பிரதோஷம்.
30.10.2024- புதன்கிழமை திருக்குறுங்குடி அழகிய நம்பி டோலாற்சவம் பத்து நாள்.
30.10.2024-புதன்கிழமை மாத சிவராத்திரி.
31.10.2024- வியாழக்கிழமை தீபாவளி, லட்சுமி குபேர பூஜை.
1.11.2024- வெள்ளிக்கிழமை கேதார கௌரி விரதம்.
விஷ்ணுபிரியா
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.