தீபாவளியின் தத்துவ விளக்கம்

பகுதி 1

தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை குதூகலம்தான். தீபாவளியைக் குறித்த இனிய நினைவுகள் எல்லோரிடமும் உண்டு. தீபாவளி என்பது நமது இந்தியாவின் பெரும் மகிழ்ச்சித் திருவிழா. நமது முன்னோர்கள் எப்போது நமக்காக உருவாக்கிக் கொடுத்த அற்புதமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று.

இது இன்றல்ல, நேற்றல்ல, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் கொண்டாடப்பட்டு வருகின்றது. தீபாவளிப் பண்டிகைக்கு நம் நாட்டில் வெவ்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம் வாருங்கள்.

தீபாவளி என்கிற வார்த்தையை பிரித்துப் பாருங்கள். தீபம் – ஆவளி. அதாவது தீபங் களின் அழகான வரிசை என்று பொருள். தீபாவளி எப்படி உருவானது என்பதற்கு மூன்று மதங்கள் மூன்று விதமான விளக்கங்களை கொடுக்கின்றன. அதாவது இந்த விளக்கங்களை சமணம், பௌத்தம், இந்து மதங்கள் மூன்று தனித்தனி விளக்கங்களாக கொடுத்து அதை ஒரே நேரத்தில் பாரத தேசம் முழுவதும் கொண்டாடும்படியான ஏற்பாடுகளை செய்துள்ளன. ஏன் இந்த மூவரும் ஒரே நாளில் இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்பதையும் பார்ப்போம்.

முதலில் சமண மதத்தில் வர்த்தமான மகாவீரர் ஞானம் அடைந்த நாளாக அதைக் கொண்டாடத் தொடங்கினார்கள். ஞானத்தின் குறியீடாக தீபாவளியை அவர்கள் உணர்ந்தனர். அடுத்ததாக பிஞ்ஞாதாரா என்று பாலியிலும் பிரக்ஞாதாரா என்று சம்ஸ்கிருதத்திலும் சொல்லப்படும் தாரா என்கிற தாரா தேவியை வழிபடும் நாளாக வைத்துக் கொண்டனர். ஏனெனில், இவள் ஒரு ஞான தேவதை. ஏனெனில், இவளில் கரங்களில் அமுத கலசம், தாமரை, வஜ்ரம் போன்றவற்றை ஏந்திய வடிவிலேயே காணப்படுவாள். இன்னும் சொல்லப்போனால் இந்த தாரா தேவியே கூட நமது இந்து மதத்தில் சாக்தத்தில் சொல்லப்படுகின்ற தாராவும் ஆவாள். அவள் பௌத்தத்திற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது இந்து மதத்திற்குள் பௌத்த தேவதைகள் வந்திருக்கலாம்.

அது ஒன்றும் பெரிய விஷயங்கள் இல்லை. ஏனெனில், விவேகானந்தர் மிக அழகாக ஓரிடத்தில் பௌத்த மதம் இந்து மதத்தின் அழகான நிறைவு என்கிறார். நம்முடைய சாக்தத்தில் தச மகாவித்யாவில் ஒருபெண்ணாக தாராவைக் குறித்து விளக்கமாக குறிப்பிடுகின்றது பாருங்கள்.

தாரீ என்றால் படகு எனப்பொருள். படகு எவ்வாறு தன்னை நம்பி ஏறி அமர்வோரை தண்ணீரில் மூழ்காமல் காப்பாற்றுகிறதோ அதே போல் இந்த தாரா தேவியும் தன் பக்தர்களை சம்சாரம் எனும் கடலில் மூழ்காமல் காத்து முக்தியை அருள்வாள் என ரிக்வேதத்தில் முதல் காண்டத்தில் 99வது அனுவாகத்தின் முதல் செய்யுளில் கூறப்பட்டுள்ளது.

வேத காலத்திலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ள அற்புத உபாசனை இந்த தாராதேவியின் உபாசனையாகும். கடல் நீரில் வெண் தாமரையில் வீற்றருளி சம்சார சாகர மத்தியில் உயர்ந்துள்ள தூய பிரும்ம ஞானம் தான் என்பதை உணர்த்துபவள். வெண் தாமரையில் திடமாக அமர்ந்தும், நின்றும் அந்த பிரம்ம வித்யையிலேயே நடந்தும் நம்மை ஆபத்தான பந்தத்திலிருந்து காப்பதால் இத்தேவி தாரா எனப்படுகிறாள்.

இப்படியாக மோட்சத்தை அளிப்பவளாகவே தாரா விளங்குகின்றாள். இந்த மோட்சத்தையே பௌத்தமும் தீபாவளியாக்கி வைத்துள்ளது. வாருங்கள். இப்பொது தீபாவளி குறித்து இந்துமதம் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம். அதற்கு முன்பு ஒரு அடிப்படை விஷயத்தை புரிந்துகொள்வோம். இந்து மதம் பண்டிகைகளை வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டுமே உருவாக்கி அளிக்கவில்லை. முதலாவது கொண்டாட்டத்தை வைத்து எல்லோரையும் ஒன்று திரட்டும்.

இரண்டாவதாக இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் என்னவெனில் என்று புராணத்தில் நிகழ்ந்த ஒரு கதையைச் சொல்லும். மூன்றாவதாக அந்த புராண கதாபாத்திரங்களை வழிபடுங்கள் என்று வழிபாட்டிற்குரிய கிரியைகளைச் சொல்லி வைக்கும். அதோடு நிற்காமல், நான்காவதாகத்தான் இந்தக் கதை ஏன் சொல்லப்பட்டது தெரியுமா? இதன் தத்துவம் என்னவென்று புரிகின்றதா? நீங்கள் வாழும் வாழ்க்கைக்கும் இந்த தத்துவங்களில் பொதிந்துள்ள வேதாந்த ஞானம் ரகசியம் என்னவென்று தெரியுமா என்று பிரம்ம வித்யை காட்டிக் கொடுக்கின்றது. ஆனால், அந்த ரகசியத்தை சட்டென்று சொன்னால் புரிந்து கொள்வார்களா என்று கொண்டாட்டம், குதூகலம் என்று இனிப்பை அளித்து நம்மை அருகே அழைக்கின்றது. முதலில் தீபாவளி உருவான கதை எதில் உள்ளது?

பாகவதத்தில் வருகின்றது. பூமாதேவிக்கும் வராக அவதாரத்தில் பெருமாளுக்கும் பிறந்தவனே நரகாசுரன். இவன் பவுமன் என்ற பெயரில்தான் பிறந்தான். பவுமன் என்றால் பலம் பொருந்தியவன் என்பது பொருள். இப்படியாக பூமியினுடைய புத்திரனான நரகாசுரன் என்னும் அரக்கன் தேவலோகத்தில் உள்ள இந்திரனை வசப்படுத்தி கொடுமைப்படுத்தி பல கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டிருந்தான். இந்திரன் ஸ்ரீ கிருஷ்ணரை மனம், வாக்கு, உடம்பு என்று துதித்து தியானித்து எப்படியேனும் நரகாசுரனின் கஷ்டத்திலிருந்து எங்களை மீட்டு காப்பாற்றுங்கள் என்று வேண்டி நின்றான். கிருஷ்ணருடைய கடாட்சத்தால் சத்யபாமா ஐப்பசி மாதம், சதுர்த்தசி இரவு விடியற்காலையில் கொன்றாள். தேவர்களின் கஷ்டமும் நீங்கியது.

நரகாசுரனை இவ்வாறு வதம் செய்த நாளையும் இந்திரன் உள்ளிட்ட அனைத்து மக்களின் துன்பங்களும் நீங்கிய நாளையே தீபாவளியாக கொண்டாடுகின்றோம். நரகாசுரனே இதைக் கொண்டாட வேண்டுமென்று வரம் கேட்டதாகவும் இந்தக் கதைக்குள் வரும். எதற்காக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்கிற கதையை இதோ மேலேயுள்ள ஐந்து வரிகளில் சொல்லி விட்டோம். ஆனால், இதற்குள் வேறொரு ஞானச் சுரங்கத்தை நமது ரிஷிகள் வைத்திருக்கிறார்கள். எப்பேற்பட்ட ஆன்மிகப் பாதையை கோடிட்டுக் காட்டி ஒவ்வொரு ஜீவன்களும் இந்த மார்க்கத்தின் வழியாகத்தான் கடைத்தேற வேண்டுமென்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம் வாருங்கள். இந்தக் கதையை இன்னும் சற்று சீர்தூக்கி பார்ப்போம் வாருங்கள்.

நரகாசுரன் என்பவன் பூமியின் புத்திரன். நம்மைப்போன்றே பூமிக்குள் வந்து பிறந்து விட்டவன். சரீரம் கொண்டிருப்பவன். சரீரமே சத்தியம் என்று நினைத்திருப்பவன். இந்த சரீரம் அழிந்துவிடுமோ என்கிற பயமும் அச்சமும் கலந்த அகங்காரத்தோடு இருப்பவன். நர என்றால் உடலோடு கூடிய மனித ஜென்மா என்பதாகும். மாயை கலந்த அவித்யை ரூபமே நரகாசுரன். சகல விதமான நல்ல, கெட்ட, மோசமான எண்ண விருத்திகள் உள்ளவன். எதைச் செய்தாலும் தானே செய்கின்றேன் அகங்கார, மமகார சிந்தனையோடு உள்ளவன்.

இந்திரன் என்பவன் ஜீவன். இங்கு கதையில் இந்திரனை நரகாசுரன் வென்றான் என்பது ஜீவனை ஆத்மாவான சச்சிதானந்த சொரூபத்திலிருந்து மறைத்தல் எனும் காரியத்தை மாயையான அவித்யையான நரகாசுரன் செய்கின்றான் என்பதாகும். அந்த உண்மையான சத்திய வஸ்துவை இந்திரன் எனும் ஜீவன் அதாவது நாம் உணர்ந்து விட்டோமானால் நமக்கு ஏன் வாழ்க்கையில் இவ்வளவு பிரச்னை வரப் போகின்றது. அதற்குத்தானே இத்தனை கோயில்கள், ஞானிகள், புத்தகங்கள் என்று ஓடியும் தேடியும் தொடர்ந்து முன்று கொண்டே வருகின்றோம். புரிகின்றதா நரகாசுரனே நம்மை எப்போதும் ஜெயித்தபடி இருக்கின்றான். வாழ்வு முழுவதும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கின்றது.

நரகாசுரன் கொடுக்கும் கஷ்டத்தில் முக்கியமானது ஜனனத்தையும் மரணத்தையும் அளித்தல். சரீர அபிமானத்தையும் அது பிறத்தலையும் இறத்தலையும் தொடர்ந்து நிகழச்செய்தல்.  இதைக் கண்ட இந்திரன் அதாவது ஜீவன், நம்மைப்போன்ற ஜீவன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதென்ன இவ்வளவு கஷ்டமென்று வழிபாடு செய்கின்றது, பக்திபுரிகின்றது. உபாசனையில் சகுண உபாசனை என்கிற உருவத்தோடு கூடிய கிருஷ்ணரை முழுவதும் பக்தி செய்து உருகுகின்றது. பக்தி முற்ற முற்ற ஞானத் தேடல் துவங்குகின்றது.

(தொடரும்)

தொகுப்பு: ஹரீஷ் ராம்குமார்

The post தீபாவளியின் தத்துவ விளக்கம் appeared first on Dinakaran.