முத்துக்கள் முப்பது

தீபங்கள் ஜொலிக்கின்ற தீபாவளி

அக்டோபர் 31 தீபாவளி

1. முன்னுரை

தித்திக்கும் தீபாவளி! திகட்டாத தீபாவளி !
எத்திக்கும் கொண்டாடும் இனிய நல்தீபாவளி!
மத்தாப்பு, புத்தாடை, மனம் இனிக்க பலகாரம்,
புத்துணர்ச்சி தந்திடும் புதுமையான பண்டிகை!
வாருங்கள்! கொண்டாடி வளமாக வாழ்ந்திடுவோம்!
வாழ்த்துக்கள் பல சொல்லி, தீப ஒளி ஏற்றிடுவோம்!

இதோ தீபாவளி வரப்போகிறது. தீபாவளி என்பது ஒரு பண்டிகையா? விழாவா? விரதமா? உற்சவமா? என்றால் எல்லாம் தான் என்று சொல்லலாம். தீபாவளி மகிழ்ச்சிக்குரிய உற்சவம். கடைபிடிக்க வேண்டிய நோன்பு. ஒவ்வொரு வீட்டிலும் உற்சாகம் தருகின்ற உன்னதமான திருவிழா. ஆம். வணிகர்களுக்கு வியாபார மகிழ்ச்சியையும், நுகர்வோருக்கு வாங்கிய ஆனந்தத்தையும் தரும் அற்புதத் திருவிழா. அகிலமெல்லாம் கொண்டாடும் திருவிழா, அதுதான் தீபாவளித் திருவிழா. அந்த தீபாவளித் திருநாளின் உன்னதத்தை 30 முத்துக்களாகக் காண்போம்.

2. தீபாவளி என்கின்ற சொல்லுக்கு பொருள்?

தீபாவளி என்கின்ற சொல்லுக்கு பொருள் தீபங்களின் வரிசை என்பதுதான். தீப +ஆவளி என்பதுதான் தீபாவளி ஆகிவிட்டது. ஆவளி என்றால் வரிசை என்று பொருள். நாமாவளி = நாமங்களின் வரிசை. அதைப்போல் இது தீபங்களின் வரிசை. ஆக, இந்த பண்டிகையின் பிரதானமான விஷயம் என்ன என்று சொன்னால் தீபங்களை வரிசையாக ஏற்றுவதுதான் முக்கியம். தீபங்களை ஏற்றுவதற்கு என்ன காரணம்? வெளிச்சம் ஏற்படுவதற்கு, துக்கங்கள் நீங்குவதற்கு தீபங்களை ஏற்றுகின்றோம்.

சவம் என்றால் துக்கம் என்று பொருள் உற்சவம் என்று சொன்னால் துக்கத்தை நீக்கிக் கொள்ளுதல் என்று பொருள். நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லாக் கஷ்டங்களுக்கும் ஒரு விடிவு காலமாக ஒரு தீபத்தை ஏற்றி வைக்கிறோம். அது நமக்கு தெளிவைத் தருகிறது. துக்கமாகிய இருட்டை விலக்குகிறது .நல் வாழ்வாகிய வெளிச்சத்தைத் தருகிறது. இறையருளை பெற்றுத் தருகிறது அதற்காகத்தான் தீபங்களை நாம் ஏற்றுகின்றோம்.

3. நள்ளிரவுப் பண்டிகை

தீபாவளி, ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருகிறது. அதற்கு அடுத்தநாள் நிறைந்த அமாவாசை. பெரும்பாலும் தீபாவளி நள்ளிரவுக்கு பின் விடிகாலையில் கொண்டாடப்படுகின்ற பண்டிகை . அமாவாசைக்கு முந்தின இரவு என்பதால் அடர்த்த இருட்டு இருக்கும். அந்த அடந்த இருட்டு தான் நம்முடைய அஞ்ஞானம் என்பது. அஞ்ஞானம் எப்பொழுதும் துன்பத்தைத் தருவது. தெளிவின்மையைத் தருவது.

அதை விரட்ட வேண்டும் என்று சொன்னால், நாம் ஆன்மிக வெளிச்சத்தை ஏற்ற வேண்டும். அந்த வெளிச்சத்தை இருட்டில் ஏற்றுவதுதான் தீபாவளியின் அடிப்படையான நோக்கம். அதன் மூலமாக நாம் ஆன்மிக ஞானத்தையும் அந்த ஞானத்தின் விளைவான பக்தியையும், அந்த பக்தியின் விளைவாக தெளிவையும் பெறுகிறோம். அதற்குப் பிறகு நம்முடைய வாழ்க்கை தெளிந்த நீரோடை போல வெற்றி மீது வெற்றி வந்து சேரும் வாழ்க்கையாக மலர்கிறது.

4. மலர்ச்சியைக் கொண்டாடுகின்ற பண்டிகை

விடிகிறது “விடியல்” என்றாலே புது வாழ்வு பிறத்தல் என்று தானே அர்த்தம் சதுர்த்தசி நள்ளிரவில் தீபங்களின் வரிசையை நாம் ஏற்றி வைக்கும் பொழுது இருட்டு அகல்கிறது சற்று நேரத்தில் மிகப் பிரகாசமான தீபமான சூரியனும் உதிக்கிறது. ஆம். உலகம் மலர்கிறது. அந்த மலர்ச்சியைக் கொண்டாடுகின்ற பண்டிகை தான் தீபாவளி. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை ஆகிய தினங்களில் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டிபடி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 14, (அக்டோபர் 31 )வியாழக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில், சதுர்த்தசி வருக்கிறது.இன்று தான் லஷ்மி பூஜையும் செய்ய வேண்டும். நாளை அமாவாசை என்பதால் அமாவாசை தர்பணாதிகளும், கேதாரகௌரி நோன்பும் அனுஷ்டிக்க வேண்டும்.

5. உலக நாடுகளில் தீபாவளி

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்திற்கு மட்டும் உரிய பண்டிகை அல்ல. இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப் படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், அமெரிக்கா ,நியூஜிலாண்ட் ,ஆஸ்திரேலிய , இங்கிலாந்து,மத்திய மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

6. ராமாயணத்தில் தீபாவளி

ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டான். துறவிகளைப் பாதுகாக்கவும், அசுரர்களை அழிக்கவும் அந்த வனவாசம் பயன்பட்டது. அதற்குப் பிறகு வனவாசத்தில் சீதாதேவி ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு இலங்கையில் அசோகவனத்தில் தனிச் சிறை வைக் கப்பட்டாள் . இதை ஆழ்வார் பின்வரும் பாசுரத்தில் உறுதி செய்கிறார்.

தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக் கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத அறிவினால் குறைவிலமே.

ராமன் சுக்ரீவனோடு சேர்ந்து, அனுமனையும் அழைத்துக் கொண்டு, இலங்கை சென்று ராவணனை வென்று, சீதா தேவியை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பினார். ராமனைப் பிரிந்து ஏக்கத்தோடு இருந்த மக்கள் ராவணனை வென்று ,திரும்பவும் ஆட்சி கட்டிலில் அமர அயோத்திக்கு திரும்புவதை மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர். வீடெங்கும் தீப மேற்றினர் அயோத்தியே ஜொலித்தது. அப்படி தீபங்களின் ஜோதியில் இராமன் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளித் திருநாள் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளித் திருநாளை அயோத்தி மக்கள் இராம பிரானோடு சேர்ந்து கோலாகலமாகக் கொண்டாடினர். இன்றைக்கும் சரயு நதிக்கரையில் உள்ள அயோத்தியில் தீபங்கள் ஜொலிக்க தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.

7. வராக புராணத்தில் நரகாசுரன் கதை

புராணக் கதைகளின்படி, திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்). பலமானவன் என்றால் தீமைகளில் பலமானவன். உலகத்தில் உள்ள அத்தனைத் தீமைகளையும் ஒரு உருவம் செய்தால் அது தான் பவுமன். அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்சோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான்.

பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டபோது, எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான். அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒருநாள் இறந்தே தீரும் என்றார். பின்பு, நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.

8. மனிதன் அசுரனான்

பொதுவாக அசுரர் தேவர் என்பது குணத்தைப் பொறுத்த விஷயமே. மனிதன் என்பது மத்திய நிலை. அவன் மனதால் உயர்ந்து பிறருக்கு உபயோகமானால் “தேவன்” ஆகிறான். இதை வள்ளுவர், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.” என்றார். உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன் தெய்வமாக மதிக்கப்படுவான். அதேநேரம் மனிதன் தன் குணத்தில் இருந்து இறங்கினால் அவன் அசுரனாகிறான்.

9. கொடுமைக்கும் முடிவு

பூமா தேவிக்கு மகனாகப் பிறந்து, குணமிழந்து, வர பலத்தால் அரக்கத்தனம் கொண்ட அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. நர(மனிதன்)+ அசுரன் = நரகாசுரன். கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். இதனால் அவனை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இன்னொரு விதத்தில் உயிரினத்துக்கு ஏதேனும் ஒரு வகை அச்சுறுத்தல் ஏற்படும்போது ,அதன் அழிவுக்கான தேவையும் உருவாகிவிடுகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும் சரியானதே . ஆனால் அதற்கும் கால அவகாசம் தேவைப்படுகிறது.வராக அவதாரத்தின் போது நரகாசுரன் தோன்றினாலும் கிருஷ்ணாவதாரம் வரை அவன் கொடுமை கட்டுக்குள் இருந்தது.

10. நரக சதுர்த்தி தீபாவளியானது

நரகாசுரனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, தேவர்கள் முறையிட்டனர். கிருட்டிணர் அவனோடு போர் தொடுக்க முடிவெடுத்தார். தனது மனைவியரில் ஒருவரான ச‌‌த்யபாமா‌ (பூமாதேவியின் அவதாரம்)வை அழைத்துக்கொண்டு போருக்குச் சென்றார். பெரும் போருக்கு பிறகு அன்னை கையாலேயே நரகாசுரன் வரம் பெற்றபடி மாண்டான். அவன் கடைசி நேரத்தில் தன தவறை உணர்ந்து பகவானிடம் வரம் கேட்டான். என்னை மக்கள் நினைவில் வைத்து, என் முடிவை (தீமையின் முடிவை) ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்க, அவனுக்கு கொடுத்த வரத்தின் படி, ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி விடியல் காலை நேரம், தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்..

11. தீமை அழிந்து நன்மை பிறந்த நாள் தீபாவளி

தீமைகளின் ஒரு உருவகம் தான் நரகாசுரன். அதர்மத்தின் குறியீடு நரகாசுரன். அதனை பூமாதேவியின் அம்சமான சத்யபாமா தெய்வமாகிய கண்ணனின் பேராற்றல் உதவியோடு வென்று உலகத்தைச் சந்தோஷப்படுத்திய தினம்தான் தீபாவளி. நம்மை வருத்திய நோய் தீர்ந்து விட்டால் நாம் சந்தோஷப்படுவோம் அல்லவா! அதைப்போல உலகை வருத்திய நரகாசுரன் எனும் தீமை அழியும் போது கிடைத்த ஆனந்தத்தைத் தான் தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். அன்று வீட்டில் நாம் பட்டாசுகள் வெடித்து, புது ஆடைகள் தரித்து, இனிப்புகள் பலகாரங்கள் செய்து, குதூகலமாகக் கொண்டாடுகின்றோம்.

12. நரகாசுரன் சொல்லும் செய்தி இதுதான்

பெரும்பாலான கதைகள் ஸ்தூல வடிவில் பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும் படி இருப்பினும் அதன் சூட்சும வடிவம் நமக்கு சில அற்புதமான செய்திகளைச் சொல்லத்தான் செய்கிறது.அப்படி நம்முடைய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்கு சில விஷயங்களை தீபாவளிக் கதை அழுத்தமாகச் சொல்கிறது. சக்தியோ அறிவோ பணமோ பதவியோ இவை எல்லோரையும் வாழ வைக்கத்தானே தவிர, மற்றவர்களைக் கொடுமைப்படுத்த அல்ல என்பதை உணர வேண்டும். எத்தகைய ஆணவமும் வர பலமும் தலைக்கு ஏறினால் அது தலையை எடுத்து விடும். அழிவுக்கு வழிவகுக்கும். இப்போதைய சூழலில் இதைச் சிந்திக்க வேண்டுமென்றால், பண பலமும் பதவி பலமும் கொண்டு பிறரை இம்சித்தால்,அது அவர்கள் அழிவுக்கு வழிகோலும்.

13. அழிவும் ஆக்கமும் அவரவர்கள் கையில்

எதைக் கையில் எடுக்கிறோமோ அதுவே திரும்பும். நன்மையைக் கையில் எடுத்தால் நன்மையே நடக்கும். தீமையைக் கையில் எடுத்தால் தீமையே திருப்பும். இதை கிராமத்தில் “அரிவாள் எடுத்தவன் அதனாலே முடிவான்” என்பார்கள். ஒருவன் கையிலெடுக்கும் விஷயமே அவனை வாழ வைக்கிறது அல்லது அழிக்கிறது. தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்காக செலவிடுகின்ற பொழுது அவனும் மற்றவர்களும் வாழ்கிறார்கள். தன்னுடைய பலத்தை மற்றவர்கள் அழிவுக்காகச் செலவிடுகிறபோது அவனே அழிகிறான். அப்படித்தான் நரகாசுரன் அழிந்தான். நீதியை நிலை நாட்டும் பொழுது பகவானோ, பூமித்தாயோ புத்திர பாசத்தைக் காட்டுவது இல்லை. காரணம் நாம் அனைவருமே பகவானுக்கு புத்திரர்கள்தான்.

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!”

(எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் அவதரிப்பேன்) என்றார், கீதையில் கண்ணன். நரகாசுரனை பிள்ளை என்று பார்க்கவில்லை. அவன் தீமையைத்தான் பார்த்தார்.

14. கேதார கௌரி விரதம் (தீபாவளி நோன்பு)

கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில்தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ‘அர்த்தநாரீசுவரர்’ உருவமெடுத்தார். கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் முக்கியமான‌ விரதம் ஆகும். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதத்தினைப் பொதுவாக பெண்களே அனுஷ்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தினை அனுஷ்டிப் பதுண்டு.கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

15. எப்படிக் கொண்டாடுவது?

முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்யப்படுகிறது. பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறார். வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, நோன்புக் கயிறு ஆகியவை படைக்கப்படுகின்றன. நோன்புக் கயிறானது 21 இழைகளால் பின்னப்பட்டுள்ளதை வைக்கவேண்டும். முதலில் விநாயகருக்கு தீப தூபம் காட்டி வணங்கப்படுகிறது. பின் கும்பத்தில் அம்மையப்பரை ஆவாகனம் செய்து தீப தூபம் காட்டி சிவன் மற்றும் சக்திக்கான பாடல்கள் பாடப்பட்டு வழிபாடு
மேற்கொள்ளப்படுகின்றது.

16. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சு

வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போடப் படுகிறது. விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக 21 நாட்கள் விரதம் பின்பற்றப்படுகிறது. 21-ம் நாளான அமாவாசை அன்று முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு அமாவாசை நவம்பர் 1 ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. மஹா லட்சுமிக்குரிய அந்த நாளில் பிரதோஷ வேளைக்குப்பின் நோன்புக்கயிறு கட்டப்படுகிறது.

நோன்புக் கயிறு முழங்கைக்கும் தோளுக்கும் இடைப் பட்டப்பகுதியில் அணியப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிற்றினை அணிகின்றனர்.முந்தைய வருடம் கட்டப்பட்ட நோன்புக் கயிறு பூஜையின் மறுநாள் நீர்நிலைகளில் விடப்படுகிறது. தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் (ஒரே நாள் விரதமாக) கடைபிடிக்கப்படுகிறது.

17. முதல்முதலில் தமிழ்நாட்டில் தீபாவளி

தீபாவளி பண்டிகை கால தேச வர்த்தமானத்தின் அடிப்படையில் பல மாற்றங்களோடு இன்று கொண்டாடும் நிலைக்கு வந்திருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் ‘யட்ஷ ராத்திரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை ‘சுகராத்திரி’ என்றும் சொல்வதுண்டு.

தமிழகத்தில் முதன்முதலாக கி.பி. 15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்திருவிழாவின்போது வான வேடிக்கையுடன் தீபாவளி கொண்டாடியதாக அங்குள்ள சுவரோவியங்கள் மூலம் அறியலாம்.

18. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்

ஹர்மந்திர் சாஹிப், அல்லது தர்பார் சாஹிப் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக “பொற்கோயில்” என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்துவார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம்தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.

1604 ஆம் ஆண்டில், குரு அர்ஜுன் சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எனும் ஆதி கிரந்தத்தை முடித்து இந்த குருத்வாராவில் அதை நிறுவினார். இந்தப் புனித கோயில், ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வந்து வழிபட வேண்டுமென்று அமைக்கப்பட்டதாகும். 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் தினமும் இங்கு வழிபாடு செய்கின்றனர். 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமானப் பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் (தீபாவளி)கொண்டாடுகின்றனர்.

19. சமணர்களின் தீபாவளி

வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் எனுமிடத்தில் கி.மு. 599-ல் ஒருக்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்தார் மகாவீரர். பெற்றோர் அவருக்கு வர்த்தமானர் என்று பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தனர். அவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை.இவர் யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வந்தார். இவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது 36-வது வயதில் மகாவீரர் உலக வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்ளத் துவங்கினார்.

இவர் 12 ஆண்டு காலம் கடும் தவம் புரிந்தார்.துறவறத்தை மேற்கொண்ட பதிமூன்றாவது ஆண்டு ரிஜூபாலிகா நதியின் வடகரையில் அமர்ந்து உயர்ந்த ஞானம் பெற்றார். இதற்குப் பின் இவருக்கு கைவல்யர், எல்லாமறிந்தவர், ஜீனர் (வென்றவர்) மகாவீரர், பெருவீரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

20. புத்தரும் தீபாவளியும்

பௌத்தத்தில், தீபாவளியை ‘தீபதான உற்சவம்’ என்றும் அழைப்பர். கதைப்படி, புத்தர் போதி கயாவில் மெய்ஞானம் பெற்ற பிறகு, அவரது தந்தை அரசர் சுத்தோதனர் மகனின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர். அவனைப் பார்க்க விரும்பினார். இதற்காக, புத்தர் இராசகிரக மகாநகருக்கு அருகிலுள்ள மங்களகிரி என்ற மலையிடத்தில் இருந்தபோது, புத்தரை கபிலவத்துவுக்குத் திரும்பி வரும்படி சுத்தோதனர் ஒரு தூதரை அனுப்பினார். ஆனால், தூதுவர் புத்தரைச் சந்தித்த பிறகு அவருடைய சீடரானார். முந்தைய தூதர் வராததால், சுத்தோதனர் மற்றொரு தூதரை அனுப்பினார், அவரும் புத்தரின் கீழ் துறந்தவரானார்.

21. தீபதான உற்சவம்

பல தூதர்களை ஒவ்வொருவராக அனுப்பினார் மன்னர். அவர்கள் பெருமானின் கீழ் உண்மையை உணர்ந்து துறவிகள் ஆனார்கள். புத்தருடன் மங்கள கிரியிலிருந்து யாரும் திரும்பவில்லை. கடைசியாக, சுத்தோதனர் தனது விசுவாசமான மந்திரி காலோதயனை அனுப்பினார், அவர் பின்வாங்க மாட்டார். இராச கட்டளையை நிராகரிக்க மாட்டார் என்று மன்னர் நம்பினார். காலோதயன், அரச தேரோட்டியான சந்தகனுடன் மங்களகிரியை நோக்கிச் சென்றான்.

புத்தரின் உபதேசத்தைக் கேட்ட காலோதயன் பெருமானின் மாணவனாக மாறினாலும், புத்தரை மீண்டும் கபிலவத்துவிற்கு வரச் செய்தான். புத்தரும் அவரது துறவிகணங்களும் கபிலவத்துவுக்குச் செல்ல அறுபது நாட்கள் ஆனது. பெருமானும் அவருடைய மாணவர்களும் கபிலவத்துவிற்கு விசயம் செய்த நாளன்று, நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விளக்குகளை வரிசையாக வைத்திருந்தார்கள். புத்தபெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களைத் வாங்க முடியாத அனைத்து ஏழைகளுக்கும் வறியர்களுக்கும் மக்கள் தீபம் அளித்தனர்.

இந்த நாள் தான் ஐப்பசி மாத அமாவாசை.புத்தரின் நகர விஜயத்தை கபிலவத்து தீபங்களை தானமாக அளித்து, ஊர் முழுவதும் அவற்றைத் தொடராக அமைத்து, வரவேற்றத்தால் அன்றைய தினம் ‘தீபதான உற்சவம்’ என்றும் ‘தீபாவளி’ என்றும் அழைக்கப்பட்டது. மகாராசா அசோகர் மகாத்தவிரர் மௌகளிப்புத்திரர் மற்றும் இந்திரகுப்தர் ஆகியோரின் மேற்பார்வையில் மௌரியத்தலைநகர் பாடலிபுத்திரத்தின் ‘அசோகாராமம்’ என்ற தனது மடாலயத்தில் தீபதான உற்சவத்தை கொண்டாடினார்.

22. ஏன் தீபாவளியை மகிழ்ச்சிக்குரிய பண்டிகையாகக் கொண்டாடுகிறோம்?

மற்ற பண்டிகைகள் அநேகம் இருந்தாலும் தீபாவளிக்குப்பின்தான் அந்த பண்டிகைகள். இந்த தீபாவளி சந்தோஷத்தின் பின்னணியில் ஒரு கதை உண்டு. அதையும் தெரிந்து கொள்வோமே! தீர்க்கதமஸ் என்ற முனிவர். அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே, அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். அவர் ஆசிரமத்துக்கு ஒருமுறை சனாதன முனிவர் வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார்.

23. விரதம் என்றாலே பட்டினிதான். தீபாவளிக்கு மட்டும் விதவிதமான பலகாரங்களா?

பொதுவாக, மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத்தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என தீர்க்கதமஸ் கேட்டார். இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை. தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார்.இந்த விரதத்தை எப்படிப் பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். அப்படி விளக்கியதுதான் தீபாவளிப் பண்டிகை.

24. கங்கா ஸ்நானம், எண்ணெய் குளியல் ஏன்?

துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி (தீபாவளி) அன்று அனைவரும் அதிகாலையில் எழ வேண்டும். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்ய வேண்டும். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேயஸ்மின் ஸந்நிதிம் குரு (ஓ புனித நதிகளான கங்கை , யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா , சிந்து மற்றும் காவேரி ; தயவு செய்து இந்த தண்ணீரில் இருங்கள் (அதை புனிதமாக்குங்கள்) என்று பொருள். எண்ணெய் குளியல் என்பது துக்கம், சோகம் நீங்கி சந்தோஷத்தைக் கொண்டாடுவதன் அடையாளம். சுபம் கொண்டாடுதல் என்பார்கள்.

25. இதெற்கெல்லாம் பூஜை செய்ய வேண்டும்

எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப் பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப் பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும். எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் இருப்பதாக ஐதீகம்.

இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் நம் முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள். அன்று மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்ச்சியோடு இருப்பர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.

26. தலை தீபாவளி

மகா விஷ்ணு சமுத்திரராஜன் மகளான மஹாலஷ்மியை மணந்து கொண்டார். அவர் தலை தீபாவளியை மாமனார் வீட்டில் கொண்டாடுகிறாராம். (பாற்கடல் மாமனார் வீடல்லவா). எனவே, தலைதீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் மாமனார் வீட்டில் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன. இதன் மூலம் மஹாலஷ்மியின் பூரண அருள் தம்பதியருக்கு கிடைக்கிறது.

27. எம தீபம் ஏற்ற வேண்டும்

துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகால மரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்குச் செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.

வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர். யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நமது முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மஹாளய அமாவாசை அன்று திதி கொடுக்கிறோம். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே.

28. ஆற்றில் தீபங்கள்

ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யம தர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே, அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்குச் சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு ஆசிர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும்.

மேலும், சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார். வடமாநிலங்களில் அன்றைய தினம் பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும் வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து போகாமலும் பார்த்துக் கொள்வார்கள். தீபங்கள் நன்கு பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும் சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

29. தன்வந்தரி ஜெயந்தி

திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக “தன்திரேயாஸ்” என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர். திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது. தன்வந்திரி பகவான் கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக் கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.

மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமர வாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய் நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. மருத்துவக் கடவுளான தன்வந்திரி பகவானின் கதையைப் படித்து அவரை முறைப்படி வழிபட வேண்டும். இவரை வழிபட்டால் நோய் நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சந்நதி உள்ளது.இன்னும் பல இடங்களிலும் உண்டு.

அன்று தன்வந்திரி மந்திரம் சொல்ல வேண்டும்.
ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீமகாவிஷ்ணவே நம: !

(பொருள்:அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே,எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மகா விஷ்ணு பகவானே உன்னை வணங்குகிறோம்.)

30. எத்தனை எத்தனை பண்டிகைகள்?

தீபாவளி மட்டுமல்ல. தீபாளிக்கு முன்னும் பின்னும் பல பண்டிகைகள் விரதங்கள், விழாக்கள் உண்டு அந்த விழாக்களும் விரதங்களும் வாழ்க்கையில் உயர்வையையும் மேன்மையையும் கொடுக்கின்றன என்பது நம்பிக்கை. துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் இருக்கின்றன என்று பார்க்கலாம். ஐப்பசி விஷு புண்ணிய காலம், துலா ஸ்நானம், ராதா ஜெயந்தி, தன்வந்திரி ஜெயந்தி, நரக சதுர்த்தசி ஸ்நானம், தீபாவளி, லட்சுமி குபேர பூஜை. கேதார கௌரி விரதம், கந்த சஷ்டி விரதம், யம துவிதியை, சஷ்டி, சூரசம்ஹாரம், அட்சய நவமி, அன்னாபிஷேகம், துலா ஸ்நான பூர்த்தி. இந்த ஆண்டு தித்திக்கும் தீபாவளியோடு மற்ற பண்டிகளையும் விரதங்களையும் மன மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post முத்துக்கள் முப்பது appeared first on Dinakaran.