இலங்கை, டெல்லி, சிலிகுரியில் இருந்து வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம மெயில் அனுப்பிய கும்பலுக்கு வலை

மீனம்பாக்கம்: இலங்கை, டெல்லி, சிலிகுரியில் இருந்து வந்த 3 விமானங்களுக்கு மர்ம மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு மர்ம ஈமெயில் வந்தது. அதில் சென்னை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிலிகுரியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாகவும், அவை வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மெயில்கள், அந்தந்த விமான நிறுவனங்களுக்கும் சென்றுள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் தங்களுடைய பணிகளை துரிதமாக தொடங்கினர்.

இதில் இலங்கையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி பரிசோதித்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. இதேபோல் மற்ற 2 விமானங்களும், உள்நாட்டு விமான நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அந்த விமானங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். அவைகளிலும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. எனவே இது வழக்கம்போல் புரளி என்று தெரிய வந்தது. இதனையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்கம்போல் நேற்றும் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் விடுத்த கும்பலை தேடி வருகின்றனர்.

The post இலங்கை, டெல்லி, சிலிகுரியில் இருந்து வந்த 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம மெயில் அனுப்பிய கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: