×
Saravana Stores

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்: மழை இல்லாததால் வியாபாரம் அனல் பறக்கும்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் நேற்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. மழை இல்லாததால் வியாபாரம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது சாதி, மதம் வேற்றுமையில்லாமல் கொண்டாடப்படுவது தீபாவளி. பொதுவாக தீபாவளி ஐப்பசி மாதத்தில், அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் முதல் பாதியில் வருவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ம்தேதி (வியாழக்கிழமை) வருகிறது.

இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடும் வகையில், இப்போதே ஆடைகள் வாங்க கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் வசதிக்காக ஆண்டுதோறும் ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் செயல்படுவது வழக்கம், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீவுத்திடல் சென்று பட்டாசுகளை வாங்கி செல்வார்கள். மற்ற இடங்களை விட குறைவான விலையில் பட்டாசு விற்பதால் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த ஆண்டு 50 பட்டாசு கடைகள் வைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி சில கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் பட்டாசு விற்பனை செய்ய விடப்பட்ட டெண்டரில் வெளிப்படை தன்மை கிடையாது என டெண்டரை நியாயமான முறையில் நடத்த வேண்டும் என சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் சில நிபந்தனைகளை நீக்கி பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டரை வெளியிட்டுள்ளனர் எனவும் கூறியிருந்தனர்.

இது, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த நிலையில் அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜரானார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து கூட்டுறவு சங்கத்திடம் மாற்றி இருப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி தீவு திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான டெண்டரை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்திற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில், சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் சார்பில் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில், 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு ரூ.2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு ரூ.4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு ரூ.5.60 லட்சம், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டது. இதில் 28 கடைகள் முதலில் ஏலம் போனது. 22 கடைகளுக்கு நேற்று மறு ஏலம் விடப்பட்டது. இதற்கிடையே பட்டாசு கடைகள் வைக்க கூடாரம் அமைக்கும் பணி நடந்து வந்தது. 4 வகையாக பிரிக்கப்பட்டு கடையின் அளவு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, அந்த கடைகளுக்கு ஏலத் தொகை கூடுதலாக விடப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் பட்டாசு கடைகளை விரைவாக திறக்க வேண்டும் என்பதில் வியாபாரிகள் தீவிரமாக உள்ளனர். இதனால் முதலில் ஏலம் எடுத்த வியாபாரிகள் பட்டாசு விற்பனையை நேற்று முதல் தொடங்கினர். மற்ற 22 கடை வியாபாரிகள் இன்று முதல் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இன்று (ஞாயிறு) விடுமுறை என்பதால் பட்டாசுகள் வாங்க தீவுத்திடலுக்கு மக்கள் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பட்டாசு வாங்க வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யவில்லை. மேலும் தீபாவளி நாளிலும் மழைக்கான வாய்ப்பு என்பது குறைவு தான். இதனால் பொதுமக்கள் மற்றும் பட்டாசு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பட்டாசு கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்கம்: மழை இல்லாததால் வியாபாரம் அனல் பறக்கும் appeared first on Dinakaran.

Tags : Chennai island ,Diwali festival ,Chennai ,Diwali ,Dinakaran ,
× RELATED தீவுத்திடலில் பட்டாசு கடைகள்...