×
Saravana Stores

கடந்தாண்டு நெல் உற்பத்தி பாதிப்பால் அரிசி விலை மூட்டைக்கு ரூ.1,200 வரை உயர்வு: 5 சதவீத ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தல்

சேலம்: தமிழகத்தில் தஞ்சாவூர், சீர்காழி, சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டிணம், ஆரணி, செய்யாறு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பல லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியாகிறது.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசி வட மாநிலங்களுக்கும், கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்கிறது. இந்த நிலையில் கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் சீர்காழி, நாகப்பட்டிணம், திருவாரூர் உள்பட பல பகுதிகளில் நெற்பயிர்கள் சாகுபடி பரப்பு குறைந்தது. இதனால் நடப்பாண்டு சீசனில் நெல் வரத்து குறைந்து, அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த அரிசி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்தாண்டு மழை இல்லாததால் சாகுபடி பரப்பு சரிந்தது. அரிசி தேவையை பொறுத்தமட்டில் நடப்பாண்டு நாம் வட மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு பிறகு வழக்கம்போல் புது அரிசி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு நேர்மாறாக நடப்பாண்டு அரிசி வழக்கமாக வரும் வரத்தை காட்டிலும் 40 சதவீதம் வரை சரிந்தது. கடந்த சில ஆண்டாக நெல் ஒரு கிலோ ரூ.19.20 என கொள்முதல் செய்யப்பட்டது. அது தற்போது ரூ.21.60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் போக்குவரத்து செலவு, வேகன் செலவு, தொழிலாளர் கூலி உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பாண்டு அரிசியின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு 100 கிலோ கொண்ட வெள்ளை பொன்னி மூட்டை ரூ.6,000 முதல் ரூ.6,200 வரை விற்றது. நடப்பாண்டு மூட்டைக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை உயர்ந்துள்ளது.

இப்போது, ரூ.7,000 முதல் ரூ.7,400 வரை விற்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக ரூ.4600 முதல் ரூ.4,800 வரை விற்ற கர்நாடகா டீலக்ஸ் பொன்னி ரூ.5,600 முதல் ரூ.6,000 வரை என்றும், ரூ.4,600 முதல் ரூ.5,000க்கு விற்ற பிபிடி ரகம் ரூ.5,600 முதல் ரூ.6,200 என்றும், கடைசி ரகமான ஐஆர் 20, ஐஆர் 50 அரிசிகள்கூட மூட்டைக்கு ரூ.400 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி 5 சதவீதம், நெல் விலை உயர்வு, ஆலைகளில் ஆட்களின் கூலி உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வாகும். அரிசி விலை குறைய வேண்டும் என்றால் ஒன்றிய அரசு அரிசிக்கு விதித்துள்ள 5 சதவீதம் ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். மேலும் நெல்லுக்கு உயர்த்தப்பட்ட விலையை குறைக்க வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* இட்லி அரிசியும் விலை உயர்ந்தது
இட்லி அரிசியை பொறுத்தமட்டில் மத்திய பிரதேசம், ஆந்திராவில்தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இட்லி அரிசி இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டை பொறுத்தமட்டில் வட மாநிலங்களிலும் இட்லி அரிசிக்கான நெல் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் இட்லி அரிசி வரத்தும் குறைந்துள்ளது. கடந்தாண்டு இட்லி அரிசி குறைந்தபட்சம் ரூ.34 என்றும் அதிகபட்சம் ரூ.40 என்றும் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு குறைந்தபட்சம் ரூ.40 என்றும் அதிகபட்சம் ரூ.46 என்றும் விற்கப்படுகிறது.

The post கடந்தாண்டு நெல் உற்பத்தி பாதிப்பால் அரிசி விலை மூட்டைக்கு ரூ.1,200 வரை உயர்வு: 5 சதவீத ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,Thanjavur ,Sirkazhi ,Chidambaram ,Tiruvarur ,Nagapattinam ,Arani ,Seiyaru ,Thiruvannamalai ,Kallakurichi ,Villupuram ,Kerala ,Delhi ,Maharashtra ,Gujarat ,
× RELATED மலை, குன்றுகளுக்கிடையே செல்லும் ரயில்...