×
Saravana Stores

மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்தது: 184 பயணிகள் தப்பினர்

குன்னூர்: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, வடகிழக்கு பருவமழை காரணமாக குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் மழைபெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே ராட்சத பாறை ஒன்று தண்டவாளத்தில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மேட்டுப்பாளையத்தில் இருந்து 184 பயணிகளுடன் குன்னூர் வந்த ரயிலை, ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டதோடு, சுமார் ஒரு மணி நேரம் போராடி, தண்டவாளத்தை சீரமைத்தனர். அதன்பின், மலை ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டது. காலை 10.05 மணிக்கு வரவேண்டிய மலை ரயில் 11.08 மணிக்கு குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

The post மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்தது: 184 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Kerala ,Karnataka ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைவு