×
Saravana Stores

கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் நேற்று (நேற்று முன்தினம்) பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரி துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

குடியிருப்பு பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் 3 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இயல்பு நிலையை கொண்டு வர போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post கொட்டி தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Tamil Nadu ,M.K.Stalin ,Madurai district ,
× RELATED முதலமைச்சர் போட்டியில் மாணவிக்கு 2 பதக்கம்