கும்பகோணம் அருகே பாரம்பரிய முறையில் தீபாவளி பலகாரம் செய்யும் பணி மும்முரம்

கும்பகோணம், அக்.24: கும்பகோணம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய முறையில் பலகாரம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உள்ளூர் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பலகாரமும், பட்டாசும் தான். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டையில் பலகாரம் கடை நடத்தி வருபவர் கோவிந்தராஜ். இவர் 27 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் பலகாரம் செய்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பயிர் உருண்டை, கெட்டி உருண்டை, சோமாசா, தேங்காய், சீனி வடை உள்ளிட்ட அனைத்து பலகாரங்களையும் 15க்கும் மேற்பட்ட வேலை ஆட்களை வைத்து பாரம்பரிய முறையில் செய்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வருகிறார்.

பாரம்பரிய முறையில் சுவை மிகுந்ததாக இருப்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இது குறித்து பலகார கடையின் உரிமையாளர் கோவிந்தராஜ் கூறும்போது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பலகாரம் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்கள் பல மடங்கு விலை ஏற்றம் அடைந்துள்ளதால் தங்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. பலகாரம் வாங்க வரும் மக்கள் குறைந்த விலைக்கு கேட்பதால் வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காக குறைந்த விலைக்கு லாபமின்றி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் வெளி மாவட்டங்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டிற்கும் பலகாரம் வாங்கி செல்வதாகவும் கூறினார். அதனால் மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post கும்பகோணம் அருகே பாரம்பரிய முறையில் தீபாவளி பலகாரம் செய்யும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: