பட்டமளிப்பு விழாவுக்கு கொடைக்கானல் வருகை; ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 31வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்,ரவி தலைமை தாங்கி, 587 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடி பொதிகை தொலைக்காட்சியின் இந்தி வார நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் இதுபற்றி எதுவும் பேசவில்லை. இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு அரசு புறக்கணித்து வருகிறது. நேற்றைய பட்டமளிப்பு விழாவையும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். வரிகள் விடுபட்ட விவகாரம் தொடர்பாக, ஆளுநரின் வருகையை கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் கருப்புக் கொடி போராட்டம் நடந்தது.

50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஆளுநருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாலை மறியல் செய்ய முயன்றபோது, போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இதனால் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், திராவிட தமிழர் மன்றம் சார்பில், கொடைக்கானல் நகர் பகுதி முழுவதும், ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post பட்டமளிப்பு விழாவுக்கு கொடைக்கானல் வருகை; ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி: விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: