எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை…: எடப்பாடி கனவு காண வேண்டாம்; 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, அக். 24: எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை. எடப்பாடி கனவு காண வேண்டாம். 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என்று கும்மிடிப்பூண்டி கி.வேணு இல்ல திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி மகனுமான கோ.ஸ்டாலின் – யுவ ஆகியோரது திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: திமுகவை பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரையில், நாம் என்றைக்கும் இருப்போம்; மக்களுக்காக பாடுபடுவோம்; பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதனால்தான், 6வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திமுக, இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது.

மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு திமுக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்டு இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி பொறாமை தாங்க முடியாமல், திமுக அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து மக்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருக்கிறதே; இன்னமும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கிற பொறாமையின் காரணமாக, செல்லாக்காசாக இருக்கக்கூடிய பழனிசாமி, இன்றைக்கு திமுக ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்ல, திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது; இதுவரை கற்பனையில்தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார்.

எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பழனிசாமியை பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம், எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம், எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை, விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல இன்றைக்கு பக்கத்து கட்சியில், தன்னுடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்ற யோக்கியதை இல்லை; வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய கட்சியை பார்த்து, வளர்ந்து இன்றைக்கு மக்களிடத்தில் ஓங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கக்கூடிய திமுகவை பார்த்து, நம்முடைய அரசை பார்த்து, இன்றைக்கு ஜோசியம் பார்த்து கொண்டிருக்கக்கூடிய பழனிசாமி சொல்கிறார். கனவு காண வேண்டாம். உறுதியாக சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத்தொடர்ந்து வரக்கூடிய எந்த தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். மணவிழா நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் நாசர், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன், எம்பி, எம்எல்ஏக்கள், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுவின் தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

The post எங்கள் கூட்டணிக்குள் விவாதம் உண்டு, ஆனால் விரிசல் இல்லை…: எடப்பாடி கனவு காண வேண்டாம்; 2026 தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: