திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில் வழிபாடு..!!

 

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று இத்தல பூதநாராயணப் பெருமாளுக்கு, ஒரு படி அரிசி வாங்கிக்கொடுத்து, அன்னப்படையல் செய்து, பெருமாளை வழிபாடு செய்தால், இல்லத்தில் நிறைந்த செல்வம் வந்து தங்கும் என்பது ஐதீகம்.திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று, கிரிவலம். பவுர்ணமி தோறும் இங்குள்ள மலையை பக்தர்கள் அனைவரும் வலம் வந்து இறைவனை வழிபடுவார்கள். இங்கு சிவபெருமானே மலையாக இருப்பதால், அந்த மலையைச் சுற்றி கிரிவலம் வருவது பெரும் பிரசித்திப் பெற்றது. இந்த ஆலயத்தின் அருகில் அமைந்திருக்கும் இரட்டைப் பிள்ளையார் கோவிலும் வெகு பிரபலம். இந்த ஆலயத்திற்கு அருகில் பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது. இது ‘பூதநாராயணப் பெருமாள் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. ஆலயம் சிறியது என்றாலும் பழமை வாய்ந்ததாக உள்ளது.

இந்த ஆலயத்தின் தெய்வமான பெருமாள், வெகுகாலமாக பூமியில் புதையுண்டு இருந்தார். அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பிற்பாடு, இவரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த சிறிய ஆலயத்திற்குள் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் விநாயகர், ஆஞ்சநேயர், சுதர்சனப் பெருமாள் ஆகியோர் ஒரே சன்னிதியில் இருப்பது விசேஷமாகும். இங்கு கருடாழ்வாரும் காட்சி தருகிறார்.

இந்தக் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று, பூதநாராயணப் பெருமாளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். அப்போது ஒரு மூடை அரிசியில் அன்னம் சமைத்து, அதனை பெருமாளுக்கு படைத்து சிறப்பு பூஜை செய்வார்கள். இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டதும், இந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த அன்னத்தை வாங்கி சாப்பிட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை அன்று இத்தல பூதநாராயணப் பெருமாளுக்கு, ஒரு படி அரிசி வாங்கிக்கொடுத்து, அன்னப்படையல் செய்து, பெருமாளை வழிபாடு செய்தால், இல்லத்தில் நிறைந்த செல்வம் வந்து தங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோவில் கருவறையில் குழந்தை கண்ணனே, பூத நாராயணப் பெருமாளாக வீற்றிருந்து அருள்பாலிப்பதாக தல வரலாறு சொல்கிறது.

கிருஷ்ணரைக் கொல்ல ஆயர்பாடிக்கு பூதகி என்ற அரக்கியை அனுப்பி வைத்தான், கம்சன். அந்த அரக்கி, நயவஞ்சமாக ஆயர்பாடி மாளிகைக்குள் நுழைந்து, குழந்தை கண்ணனைத் தூக்கிக் கொண்டு விண்ணில் பறந்தாள். அப்படி பறந்த வேளையில், தன்னுடைய மார்பில் இருந்து விஷப்பாலை, கண்ணனுக்குப் புகட்டினாள். ஆனால் குழந்தையாக இருந்த கண்ணன், அந்த பூதகியின் மார்பின் வழியாக அவள் ரத்தம் முழுவதையும் உறிஞ்சி குடித்தான். இதனால் அரக்கி இறந்து போனாள்.

பூதகியிடம் விஷப்பால் உண்ட கண்ணனே, இங்கு ‘பூத நாராயணர்’ என்ற பெயரில் அருள்கிறார். இந்த ஆலய இறைவனை வேண்டிக்கொண்டால், அறிவும், ஞானமும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் குழந்தைகளுக்கு உள்ள தீராத நோய், கண் திருஷ்டி போன்றவை அகலும்.

The post திருவண்ணாமலை பூதநாராயணப் பெருமாள் கோவில் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: