‘‘இரண்டு பைசாக்கள்’’

‘‘கிடைத்தற்கரியன மூன்று. இம்மூன்றும் இறையருளால் மட்டுமே கிடைக்கும். மனிதப்பிறவி, மோட்சத்தில் விருப்பம், உயர்ந்தவரான குருநாதரின் திருவடிகளை அடைதல்’’.
துர்லபம் த்ரயமேவைதத் தைவாநுக்ரஹ ஹேதுகம்
மநுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா
புருஷ ஸம்ஷ்ரய:
என்பது சங்கரர் அருளிய ‘‘விவேக சூடாமணி”.

நவீனஸ் ஸ்ரீ குரு சரித்ரம் எனப்படும் ‘ஸ்ரீ ஸாயி ஸத்சரித்ரம்’ அண்ணாசாகேப் தாபோல்கர் என்றழைக்கப்படும் ஹேமத்பந்த் அவர்களால் எழுதப்பட்டது.மிக உயரிய புனிதத் தன்மை வாய்ந்தது. சாயி பக்தர்களால் பண்டைக்கால புராணங்களுக்குச் சமமாக போற்றப்படுவது. தினமும் பாராயணம் செய்யப்படுவது.ஒருமுறை ஹேமத்பந்த் பாபாவின் கால் களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார். ‘ஸாதேயின் பிரச்னை தீர பாபா ஸ்ரீகுரு சரித்திரம் வாசிக்கும்படி கட்டளையிட்டிருந்தார்.

அதனை ஸாதே ஏழு தினங்கள் படித்து முடித்தார். படித்து முடித்தவுடன் பாபா ஸாதேவிற்கு கனவில் காட்சியளித்தார். அவர் கைகளில் ஸ்ரீகுரு சரித்திரம் இருந்தது. இந்தக் கனவினை காகா தீட்சித் பாபாவிடம் கூறி, ‘இதற்குப் பொருள் என்ன’ என்று ஸாதே சார்பாக கேட்டார். அதற்கு பாபா, ‘இரண்டாம் முறை ஸ்ரீகுரு சரித்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். அதனால் நல்ல பலன் கிடைக்கும்’ என்று கூறினார்.

இம் மொழிகளை கேட்ட ஹேமத்பந்த் கடந்த ஏழு ஆண்டுகளாக நான் பாபாவிற்கு சேவை செய்து வருகிறேன். ஒரு நாளும் காட்சி கிடைக்கவில்லை. ஸாதே ஒரு வாரம் தான் ஸ்ரீகுரு சரித்திரம் படித்தார். பாபாவின் காட்சி கிடைத்தது. பாபாவின் கருணை மழைக்காக காத்திருக்கும் சாதகப் பறவையைப் போல நான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்தார். இந்த எண்ணம் அவர் மனதில் உதித்த அத் தருணமே பாபா அதனை அறிந்து கொண்டார். உடனே அவரிடம், ‘ஷாமாவிடம் சென்று சிறிது நேரம் பேசிவிட்டு அவரிடமிருந்து ரூபாய் பதினைந்தை தட்சிணையாக வாங்கி வா’ என்றார்.

ஹேமத்பந்த் ஷாமாவின் வீட்டிற்குச் சென்று பாபா ரூபாய் பதினைந்தை தட்சிணையாகக் கேட்டார் என்று சொன்னார். ஷாமா மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர். ‘என்னிடம் கொடுக்கப் பணம் இல்லை. ரூபாய்களுக்கு பதிலாக எனது பதினைந்து நமஸ்காரங்களை பாபாவிற்கு சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறினார்.

‘‘இந்த ஆண்டவனின் (பாபா) லீலைகள் அறிந்துகொள்ள இயலாதவை. அவர்தம் லீலைகளுக்கு முடிவில்லை. யாரே அவற்றைக் கண்டுகொள்ள இயலும்? தமது லீலைகளால் விளையாடுகிறார் என்றாலும் அவைகளால் பாதிக்கப்படாதவராகவே உள்ளார். தங்களைப் போன்ற கற்றறிந்தவர்களை என் போன்ற அறிவிலிகளிடம் ஏன் அனுப்புகிறார் என்பது புதிராகவே உள்ளது.ஒரு பக்தன் எவ்வளவு நெஞ்சுரங் கொண்டவனாகவும், தீர்மானமுள்ளவனாகவும் இருக்கிறானோ, அங்ஙனமே பாபாவின் அருளிச்செயலும் அமைகிறது. சில சமயங்களில் தீவிர சோதனைக்குப் பின் உபதேங்களைக் கொடுக்கிறார் என்றார் ஷாமா. உபதேசம் என்றவுடன் ஹேமத்பந்திற்கு மனதில் ஒரு மின்னல் அடித்தது. என்றாலும் தனது ஆவலை அடக்கிக் கொண்டு ஷாமாவின் கதைகளைக் கேட்கத் தொடங்கினார்.

காஷாபா தேஷ்முக் என்பவரின் தாயான ராதாபாய் தேஷ்முக் அம்மையார் பாபாவை பார்க்க வந்தார். பாபாவின் தரிசனத்தைப் பெற்று மிகவும் திருப்தியடைந்தார். உள்ளார்ந்த அன்புடன் நேசித்தார். பாபாவைக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து ஏதேனும் உபதேசம் பெற வேண்டும் என்று தீர்மானித்தார். பாபா தமக்கு உபதேசம் கொடுக்காத வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக உறுதி பூண்டார். தனது இருப்பிடத்தில் தங்கி மூன்று நாட்கள் உணவையும், நீரையும் விட்டொழித்தார். அப்பொழுது நான் பாபாவிடம் சென்று, ‘தேவா, தாங்கள் கருணைகூர்ந்து அவரை ஆசிர்வதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டேன்.

பாபா அவரைக் கூப்பிட்டு அனுப்பினார். ‘ஓ! அம்மா உங்களையே நீங்கள் தேவையற்ற சித்ரவதைக்கு ஆளாக்கிக் கொள்கிறீர்கள். தாங்கள் என் தாய்; நான் உங்களது குழந்தை. என் கதையை நான் சொல்கிறேன். எனக்கு ஒரு குரு இருந்தார். அவர் ஒரு பெரிய மகான். மிக்க கருணையுள்ளவர். நான் அவருக்கு நெடுங்காலம் சேவை செய்தேன். ஆனாலும் என் செவியில் அவர் எந்த மந்திரத்தையும் ஓதவில்லை. அவருக்குச் சேவை செய்து எப்படியாவது அவரிடமிருந்து உபதேசம் பெற வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தேன்.

ஆனால் அவருக்கென்றே ஒரு தனி வழி இருந்தது. அவர் என் தலையை மொட்டையடிக்கச் சொன்னார். மொட்டையடித்து விட்டு அவரிடம் சென்றபோது இரண்டு பைசாக்களைத் தட்சிணையாகக் கேட்டார். ஒரு நிறைவு பெற்ற குரு எப்படி தட்சிணை கேட்கலாம். அவர் பற்றற்றவரா ? என்றால் ஆம் அவர் பற்றற்றவர் தான். அவர் காசுகளை லட்சியம் செய்யவில்லை.

அவர் கேட்டது காசுகளை அல்ல. அவர் கேட்ட முதல் பைசா உறுதியான நம்பிக்கை என்னும் ஷ்ரத்தா, இரண்டாவது பைசா பொறுமை என்னும் ஸபூரி. இந்த இரண்டையும் அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரிதும் மனம் மகிழ்ந்தார். நான் அவருடன் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். அவருக்குத் தொடர்ந்து பணிவிடை செய்தேன். உணவுக்கோ, உடைக்கோ பஞ்சமில்லை. அன்பின் வடிவானவர்.

அவருடைய அன்பை விவரிப்பது சாத்தியமல்ல. அவர் என்னை ஆழ்ந்து நேசித்தார். அவரைப் பார்க்கும் போது என் நெஞ்சில் ஆனந்தம் நிரம்பியது. அவர் பேரானந்தத்தில் இருந்தார். பசி, தாகம் மறந்து அவரையே உற்றுநோக்கிக் கொண்டிருப்பேன். அவரில்லாமல் நான் தவித்தேன். எனது தியானத்திற்கு அவரைத் தவிர வேறு எவ்விதப் பொருளும் இல்லை. அவரே என் அடைக்கலம். என் மனம் அவர் மீது எப்போதும் நிலை கொண்டிருந்தது. ஷ்ரத்தாவும் ஸபூரியும் எப்பொழுதும் சேர்ந்தே இருப்பவை. என் குரு என்னிடமிருந்து வேறு எதையுமே எதிர்பார்க்கவில்லை.

எப்போதுமே என்னைக் காத்து வந்தார். தாய் ஆமை தன் குஞ்சுகளை தன் பார்வையால் பராமரிப்பது போல என்னைக் காத்து வந்தார். அம்மா! என் குரு எனக்கு எந்த மந்திரமும் உபதேசிக்கவில்லை. பின்னர் நான் எப்படி உங்களுக்கு மந்திரம் கொடுக்க முடியும். யாரிடமிருந்தும் மந்திரமோ உபதேசமோ பெற முயற்சிக்க வேண்டாம். ‘‘என்னையே உங்களது எண்ணங்கள், செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.

சந்தேகம் சிறிதுமின்றி வாழ்க்கையின் ஆன்மிக இலட்சியமான பரமார்த்திகத்தை எய்துவீர்கள். என்னை முழுமனதுடன் நோக்குங்கள். பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன். இம் மசூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையையே பேசுகிறேன். உண்மையைத் தவிர வேறெதுவும் பேசவில்லை. சாதனைகள் ஏதும், ஆறு சாஸ்திரங்களில் கைதேர்ந்த அறிவு எதுவும் தேவையில்லை. குருவின் மஹத்துவத்தை உணர்ந்து அவரே மும்மூர்த்திகளின் அவதாரம் என்று உணர்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் பாபா. ராதாபாய் தேஷ்முக் அதனைக் கேட்டு தன் உண்ணாவிரத்தைக் கைவிட்டு பாபாவை வணங்கி நின்றாள்.

‘‘குரு அங்க்ரி தீவ்ர பக்தி: சேத் ததேவ அலம் இதீரயதேநம: ஒருவன் (ஆன்மிகத் துறையில்) முன்னேறவும் நல்வாழ்வு பெறவும் குருவினிடம் தீவிரமான பக்தி வைக்க வேண்டும் என்று போதித்தவருக்கு நமஸ்காரம் என்று ஸ்ரீஸாயி ஸஹஸ்ரநாமம் பாபாவைப் போற்றுகிறது.

ஹேமத்பந்த் இக்கதையைக் கேட்டு உள்ளம் உருகினார். அவர்தம் தொண்டை அடைத்தது. ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை. ‘தங்களுக்கு என்ன நடந்தது? ஏன் மௌனமாகி விட்டீர்கள்?’ என்று ஷாமா கேட்டார். அச்சமயத்தில் மசூதியில் ஆரத்தி வழிபாடு தொடங்கவே ஹேமத்பந்த்தும் ஷாமாவும் மசூதிக்குச் சென்றனர்.ஹேமத்பந்தைப் பார்த்து பாபா, ஷாமாவிடம் வாங்கிய தட்சிணையைக் கொடுக்கும்படி கேட்டார். அதற்கு ஹேமத்பந்த் ஷாமா ரூபாய்க்குப் பதிலாக பதினைந்து நமஸ்காரங்களை கொடுத்ததாகச் சொன்னார். ‘நல்லது, நீங்கள் இருவரும் பேசியதைக் குறித்துச் சொல்லுங்கள்’ என்றார் பாபா, ஹேமத்பந்த், ‘ராதாபாய் தேஷ்முக் அம்மையாரின் கதை மிக அற்புதமானது’ என்று சொன்னார்.

அதற்கு பாபா, ‘அதன் மூலம் தாங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?’ என்று கேட்டார். ‘என் மனச்சஞ்சலம் அகன்றது எனக்கு உண்மையான சாந்தியும் அமைதியும் கிடைத்தது. உண்மையான வழியைத் தெரிந்து கொண்டேன்’. அதற்கு பாபா ஹேமத்பந்திடம், ராதாபாய் தேஷ்முக் அம்மையாரிடம் சொன்னது போல மீண்டும், ஆன்மிக பயணத்தில் குருவின் இன்றியமையாமையை எடுத்துரைத்தார்.

‘‘எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது, ஆன்மாவின் ஞானத்தை, அதாவது அனுபூதி அடைவதற்கு தியானம் மிகவும் அவசியம். அதை தாங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் எண்ணங்கள் ஒருமைப்படுத்தப்படும். எனது உருவமற்ற சச்சிதானந்த சொரூபத்தை தியானம் செய்யுங்கள். அவ்வாறு செய்ய இயலாவிட்டால் எனது ரூபத்தையே தியானம் செய்யுங்கள். அப்பொழுது த்யாதா (தியானம் செய்பவர்), த்யானம் (தியானம் என்னும் செயல்) த்யேயம் (தியானிக்கப்படும் வஸ்து) ஆகியவற்றிடையே உள்ள பேதம் மறைந்து விடும்.

தியானம் செய்பவர் ஆனந்த நிலையில் பிரம்மத்துடன் ஐக்கியமாகி விடுவர். தாய் ஆமை நதியின் ஒரு கரையிலும் அதன் குட்டிகள் மறுகரையிலும் இருக்கின்றன. தாய் குட்டிகளுக்கு பாலோ அரவணைப்போ தருவதில்லை. அதன் நினைப்பும் பார்வையும் குட்டிகளுக்கு போஷாக்கை அளிக்கின்றன. அதைப் போலவே, குட்டிகள் தங்கள் தாயை நினைத்திருப்பதைத் தவிர (தியானம்) வேறு செய்வதில்லை. அதுவே இருவரின் மகிழ்ச்சிக்கு ஆதாரம்.

அதைப்போலவே, குருவுக்கும் சீடர்களுக்கும் உள்ள உறவு இது தான்” என்று கூறி பாபா ஹேமத்பந்திற்கு கற்கண்டு கொடுத்தார். மேலும், ‘ஷ்ரத்தா (நம்பிக்கை), ஸபூரி (பொறுமை) என்ற இரண்டையும் இந்த இனிப்பைப் போலவே நினைவில் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாய் இருங்கள்’ என்றார். ஹேமத்பந்த் பாபாவின் திருவடிகளை வணங்கி, ‘இவ்வாறே எனக்கு அனுகூலம் செய்யுங்கள். என்னை எப்பொழுதும் ஆசிர்வதித்துக் காப்பாற்றுங்கள்’ என வேண்டினார்.

பாபா, ‘இக்கதையைக் கேட்டு அதனைக் குறித்துதியானித்து அதன் சாரம்சத்தை புரிந்துகொள்ளுங்கள். நிச்சயம் பகவான் உங்கள் முன் தோன்றுவார்’’ என்றார்.‘‘குரு ஆத்ம தேவதா புத்த்யா ப்ரஹ்மானந்த மயம் – குரு, தெய்வம், ஆத்மா மூன்றும் ஒன்றென உணர்ந்துஎப்போதும் தியானித்து அதன் பயனாக தெய்வீக நிலையை அடைய வேண்டும்’’ என்பதை நம் மனதில் பதியும்படி எடுத்துரைத்தார்.

ஹேமத்பந்த் பெற்ற கற்கண்டு பிரசாதத்தைப் போலவே நாமும் இக்கதையின் இனிமையை அனுபவிப்போம். ஷ்ரத்தா (நம்பிக்கை), ஸபூரி (பொறுமை) இரண்டையும் நாம் நம் குருவிற்கு காணிக்கையாகத் தந்து ஆன்மிக வாழ்வின் உயரிய நிலையை அடைவோமாக! சாயி சரணம்!!

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post ‘‘இரண்டு பைசாக்கள்’’ appeared first on Dinakaran.

Related Stories: