கற்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ,
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்தி ருக்குமோ,
மருப்பொசித்த மாதவன்றன்
வாய்ச்சுவையும் நாற்றமும்,
விருப்புற்றுக் கேட்கின்றேன்
சொல்லாழி வெண்சங்கே!
இந்த பத்துப் பாசுரங்களும் பாஞ்சன்னியத்தை அதாவது சங்காழ்வானை மையப்படுத்தி பாடியவை ஆகும். மற்ற பாசுரங்களில் ஆங்காங்கு பாஞ்சசன்னியத்தை சங்கைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். ஆனால், இங்கோ பத்துப் பாசுரங்களுமே இதை மையமாக வைத்தே பாடியிருக்கிறாள்.சங்கிற்கு ஏன் ஆண்டாள் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து பாடியிருக்கிறாள் என்று பார்க்கும்போது, பொதுவாக எல்லோருமே சுதர்சன ஆழ்வாரை அதாவது சக்கரத்தாழ்வாரை பிரதானமாகப் பாடுவது வழக்கம். பகவானுடைய ஆயுதம் என்று சொன்னாலே சக்கரத்தாழ்வாரை குறிப்பிடுவது வழக்கம். மேலும், பொதுப்படையாக பஞ்சாயுதங்கள் என்று சொல்வதும் வழக்கம். அதாவது சங்கு, சக்கரம், கதை, வாள், வில் போன்றவை ஆகும். சங்கு பாஞ்சசன்யம், சக்கரம் சுதர்சனம், கதை கௌமோதகி, வாள் நந்தகம், வில் சாரங்கம் (சார்ங்கம்), இதில் சங்கை ஆண்டாள் பிரதானமாக பாடுகிறாள். மற்ற ஆயுதங்களை விட சங்கையே இங்கு பிரதானமாக்கி பாடுவதன் காரணம் என்ன?
சங்கு பகவானின் கைகளிலேயே இருக்கிறது. அது சரி, மற்ற ஆயுதங்களும் பகவானின், கைகளில் தானே இருக்கிறது என்று தோன்றும். ஆனால், மற்ற ஆயுதங்களுக்கும் சங்கிற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது. ஒருவேளை சக்கரத்தை எடுத்துக் கொண்டால், சக்கரத்திற்கு வேலை வரும்போது அதாவது சக்கரத்தால் சம்ஹாரம் செய்ய வேண்டுமென்ற வேலை வரும்போது சக்கரம் கைகளிலிருந்து புறப்பட்டுப்போய் சம்ஹாரம் செய்துவிட்டு மீண்டும் கைக்கு வருகின்றது. ஆனால், சங்கானது கையிலேயே இருக்கிறது. சங்கிற்கு வேலை வரும்போது என்ன ஆகின்றதெனில், கையிலிருந்து புறப்பட்டு போகாமல், கையிலிருக்கும் சங்கானது பகவானின் திருவாய்க்கு அருகே வருகிறது.
அதனால், கையிலேயே இருந்தாலும் விலகிப்போய் வேலையை முடித்துவிட்டு வரக்கூடியது சக்கரம். இதே போன்றுதான் மற்ற ஆயுதங்களும் பகவானிடமிருந்து புறப்பட்டு மீண்டும் பகவானை வந்தடைகின்றது. ஆனால், சங்கு கையிலேயே இருக்கிறது. அதற்கான வேலை வரும்போது விலகிப்போய் வேலையை பார்க்கவில்லை. அது, தான் இருக்கக்கூடிய இடத்தைவிட இன்னும் நெருக்கமான இடத்திற்கு வருகின்றது. இவ்வளவு நேரமாக கைக்கருகே இருந்தது, இப்போது திருவாய்க்கு அருகே வருகின்றது. எனவே, நம்முடைய விஷயத்தை சங்கினிடம்தான் கேட்க முடியும். ஏனெனில், பிராட்டி எப்படி பகவானுக்கு நெருக்கமோ, அதேமாதிரியான நெருக்கமான ஸ்தானம் சங்கிற்கு இருக்கிறது. அதனால், சங்கினிடம்தான் நாம் சில விஷயங்களை கேட்க முடியும். அதனாலேயே ஆண்டாள் இங்கு சங்கை தேர்ந்தெடுக்கிறாள்.
இன்னொன்று, பஞ்சாயுதங்கள் என்று சொன்னவுடனே மற்ற ஆயுதங்களைப்போல பாஞ்சசன்னியத்தை கொண்டு யாரையும் சம்ஹாரம் செய்ய முடியாது. சம்ஹாரம் செய்ததும் இல்லை. இப்போது சுதர்சனத்தை வைத்து சம்ஹாரம் செய்திருக்கிறார். அதுவொரு ஆயுதம். இதேபோல மற்ற ஆயுதங்களை வைத்து சம்ஹாரம் செய்யலாம். ஆனால், சங்கைக் கொண்டு சம்ஹாரம் செய்ய முடியாது. ஆனாலும், இதையும் ஏன் பஞ்சாயுதத்தில் வைத்திருக்கிறார்கள் எனில், மற்ற ஆயுதங்கள் போய் பிரயத்தனப்பட்டு ஒரு விஷயத்தைச் செய்கிறது. சுதர்சனத்தை அனுப்பி அதை சம்ஹாரம் செய்ய வைக்கிறார். இவ்வாறு மற்ற ஆயுதங்களை பயன்படுத்தி துஷ்ட நிக்ரஹம் ( கேடு விளைவிப்பவர்களை அழித்தல்), சிஷ்ட பரிபாலனம் அதாவது தர்ம நெறியில் வழுவாமல் இருப்பவரை காத்து அருளுதலையும் செய்கிறார்.
ஆனால், பாஞ்ச சன்னியம் என்கிற சங்காழ்வான் எங்கேயும் போய் எந்தப் பிரயத்தனமும் படுவதில்லை. பகவானி திருவாய் ஓரத்தில் வைத்து ஊதினாரெனில், அந்த நாதத்திலேயே துஷ்டர்களின் இதயம் பிளந்துவிடுகின்றது. ஏனெனில், பகவான் பாஞ்சசன்னியத்தை எடுத்து ஊதும்போது கௌரவ சைன்னியத்தில் இருப்பவர்களின் இதயம் பிளந்தது என்று பகவத்கீதையின் ஓரிடத்தில் வருகின்றது. அப்போது தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே செய்ய வேண்டியதை, மிக வலிமையான செயலை சங்காழ்வான் தன்னுடைய நாதத்தினாலேயே நடத்திக் காண்பிக்கிறான். ஒலியினாலேயே நடத்துகின்றான். இதையெல்லாம் வைத்துத்தான் ஆண்டாள் நீ எவ்வளவு பெரிய பாக்கியசாலி. நான் உன்னிடம்தான் சில விஷயங்களைச் சொல்ல முடியும் என்கிறாள்.
சங்காழ்வான் என்று எடுத்துக் கொண்டால் சங்கம், அதாவது, பகவானுடைய சங்கம் என்பது நாத சொரூபம். இந்த நாத சொரூபத்தை பகவான் தன்னுடைய சங்கமாக வைத்திருக்கிறார்.இந்தப் பாசுரத்தில் அந்தச் சங்கினிடம் ஆண்டாள் கேட்கக் கூடிய விஷயம் என்னவெனில், கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ… என்று தொடங்குகிறாள். கற்பூரம் நல்ல மணமுடையதுதான் அதிலொன்றும் சந்தேகமில்லை. ஆனால், கற்பூரத்தில் கடினத் தன்மை இருக்கும். ஆகவே, இந்த கடினத் தன்மையை பார்த்துவிட்டு கமலப்பூ நாறுமோ என்று அடுத்த வார்த்தையை போடுகிறாள். சூரிய ஒளிபட்டு அந்த தாமரைப்பூ மலரும்போது இயற்கையாக அந்த இடத்தில் ஒரு மணமும் சுகந்தமும் பரவும். அந்த மணத்தை மனதில் வைத்துக் கொண்டும், அதேசமயம் தாமரையின் மென்மையை மனதில் வைத்துக் கொண்டும் ஆண்டாள் முதலில் கற்பூரம் நாறுமோ என்று சொன்னாலும், கமலப்பூவின் மென்மையையும் மணத்தையும் சொல்லிப்போகிறாள்.அது சரி ஆண்டாள், எதை நோக்கிக் கொண்டு செல்கிறாள் என்று பார்த்தால் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ… இப்போதுதான் எதைப்பற்றிய பேச்சு… அதாவது எதைப்பற்றி சங்காழ்வானிடம் கேட்கிறாள் என்பது புரிகிறது. பகவானினுடைய திருப்பவளச் செவ்வாய்தான் கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ… என்று கேட்கிறார். அதாவது திருப்பவளச் செவ்வாய்பற்றி சங்காழ்வானிடம் ஆண்டாள் கேட்கிறாள் என்பதும் தெரிகிறது. இதில் தித்தித்திருக்குமோ என்று கேட்கிறாள். திருப்பவள செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ என்கிறாள். இதற்கு முன்பு மணத்தைப்பற்றிய விஷயத்தைச் சொல்லிவிட்டு, இந்த வரியில் சுவையைப்பற்றிய வரியைச் சொல்கிறாள். மதுரமான சுவை இருக்குமோ… இனிமையான சுவை இருக்குமோ என்று கேட்கிறாள்.
இதில் சூட்சுமமான ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். அது என்னவெனில், திருப்பவளச் செவ்வாயால், அதாவது அவருடைய வாயைத் திறந்து நமக்கு ஏதேனும் விஷயம் சொல்லும்போதோ அல்லது சங்காழ்வானை திறந்து ஊதும்போதோ… நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். பகவானின் வாயைத் திறக்கும்போது அங்கே பற்களையும் நாக்கையும் தரிசிக்கின்றோம். கற்பூரம் கடினத் தன்மை கொண்டது. கற்பூரம் போன்று பகவானுடைய பற்கள், கடினத் தன்மையும் வெண்மைத் தன்மையும் உடையதாக இருப்பதால் கற்பூரம் நாறுமோ என்றும் எடுத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் பகவானின் நாக்கு கமலப்பூவைப்போன்று மென்மையாகவும் கமலப்பூவைப்போன்று செந்நிறமாகவும் அந்த நாக்கு இருப்பதால், கமலப்பூ நாறுமோ என்று அந்த வார்த்தைகளை இட்டாளோ என்று பார்க்கிறோம்.
(தொடரும்)
The post ஆண்டாள் அருளிய அமுதம் appeared first on Dinakaran.