தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் அக்.26 முதல் போக்குவரத்து மாற்றம்: கூடுதல் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு

கோவை: தீபவாளி பண்டிகையையொட்டி கோவை மாநகரில் வருகின்ற 26ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதோடு, வாகன ஓட்டிகளின் வசதிக்காக கூடுதல் பார்க்கிங் வசதி செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக ஒரே நேரத்தில் பொதுமக்கள் வருகை புரியும் போது ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, ராஜ வீதி, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு மற்றும் மாநகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க கோவை மாநகர காவல் துறை சார்பில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் (பார்க்கிங் வசதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் கடைவீதி, டவுன்ஹால் மற்றும் ஒப்பணக்காரவீதி பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்த பயன்படுத்தி கொள்ளலாம். உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிர்ப்புறம் கோவை மாநகராட்சியால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தம் (இலவசம்), ராஜவீதி சோளக்கடை கார்னரில் உள்ள மாநகராட்சி பார்க்கிங், மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி பார்க்கிங், பெரிய கடைவீதி ராயல் தியேட்டர் பார்க்கிங், என்.எச்.ரோடு ராஜா தியேட்டர் மற்றும் அதற்கு எதிரிலுள்ள போத்தீஸ் பார்க்கிங் ஆகிய இடங்களில் கட்டண முறையில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சிறைத்துறை மைதானம் பார்க்கிங் மத்திய பேருந்து நிலையம் எதிரில் (இலவசம்), கிராஸ்கட் ரோடு எஸ்ஆர் ஜீவல்லரி எதிர்புறம் உள்ள மார்டின் மைதானம்(இலவசம்), வடகோவை மாநகராட்சி பள்ளி மைதானம் (இலவசம்), கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ், கிராஸ்கட் ரோடு மாநகராட்சி பார்க்கிங் ஆகிய இடங்களில் கட்டண முறையில் வாகனங்களை நிறுத்தலாம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் மிகுதியாக இருக்கும் என்பதால் அதனை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) முதல் கீழ்கண்ட சாலைகள் வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பணக்கார வீதி வழியாக காந்திபுரம், அவினாசி சாலை மற்றும் திருச்சி சாலை செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி சுங்கம் புறவழிச்சாலையை அடைந்து வாலாங்குளம், கிளாசிக் டவர் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ஒப்பணக்கார வீதி வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை நோக்கி செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக செல்வபுரம் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் வலது புறம் திரும்பி செட்டிவீதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சலிவன் வீதி வழியாக காந்திபார்க்கை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

கிராஸ்கட் ரோடு வழியாக வடகோவை, சிந்தாமணி, ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக செல்லாமல் 100 அடி ரோடு, வடகோவை சிவானந்தா காலனி வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பார்க் கேட், எல்ஐசி, அண்ணா சிலை, லட்சுமி மில் வழியாகத்தான் செல்ல வேண்டும். அதே வழியாகத்தான் திரும்பவும் வரவேண்டும் நகருக்குள் வர அனுமதி இல்லை. ஒப்பணக்காரவீதி மற்றும் ராஜவீதி பகுதிக்கு பொருட்கள் வாங்க வரும் பயணிகளை ஏற்றி வரும் ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் ஒப்பணக்கார வீதி போத்தீஸ் சந்திப்பு வழியாக செல்லாமல் ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி சந்திப்பில் இடது புறம் திரும்பி வைசியாள் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, ராஜவீதி வழியாக ஒப்பணக்காரவீதி லாலா கார்னரில் பயணிகளை இறக்கி விடவேண்டும். மேலும், சரவணா செல்வரத்தினம் முன்பும், ஐந்து முக்கு பகுதியிலும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.கிராஸ்கட் ரோடு மற்றும் நஞ்சப்பா ரோடு பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் அக்.26 முதல் போக்குவரத்து மாற்றம்: கூடுதல் பார்க்கிங் வசதிக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: