சென்னை விமான நிலையத்தில் 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து, உள்நாட்டு முனையத்திற்கு டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் 7 அடி உயரம், 3 அடி அகல கண்ணாடி கதவு நேற்று திடீரென உடைந்து நொறுங்கியது. இதை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அதிகாரிகள், அந்த வழியை மூடிவிட்டு பயணிகளை வேறு வழியாக அனுப்பினர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வருகை பகுதியில் 5ம் எண் கேட் வழியாக, பயணிகள் வெளியில் வருவார்கள்.

இவர்களில் உள்நாட்டு விமானத்தில் பயணிக்க வேண்டிய டிரான்சிட் பயணிகள், அதன் அருகில் உள்ள மற்றொரு கேட் வழியாக உள்நாட்டு விமான நிலையத்திற்குள் செல்வார்கள். விமான நிலைய ஊழியர்களும் அந்த கேட்டை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் நேற்று காலையில் திடீரென டிரான்சிட் பயணிகள் விமான ஊழியர்கள் செல்லக்கூடிய கேட்டில் உள்ள இரண்டு கண்ணாடி கதவுகளில் ஒரு கண்ணாடி கதவு, திடீரென உடைந்து நொறுங்கி, கீழே சிதறி விழும் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.

இதனால் டிரான்சிட் பயணிகள் அந்த வழியில் செல்வதற்கு பயந்து, வெளியே நின்று கொண்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, அந்த கேட் வழியாக யாரும் செல்லாதபடி கேட்டை டேப் போட்டு மூடி வைத்துள்ளனர். அதோடு பயணிகள் அனைவரையும் மாற்று வழியில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.

இதற்கிடையே இந்த கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பயணிகள் யாராவது தங்களுடைய உடைமைகளை எடுத்துச் சென்ற டிராலியை கண்ணாடி கதவு மீது மோதி கண்ணாடி உடைந்ததா, இல்லையேல் தானாக உடைந்து விட்டதா என்று விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே இருந்த பழைய கட்டிடத்தில் தொடர்ச்சியாக சுமார் 90 முறைகள் கண்ணாடி கதவுகள் உடைந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை விமான நிலையத்தில் 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: