தீபாவளியை முன்னிட்டு அக். 25 முதல் நவ.5 வரை 40 சிறப்பு ரயில் இயக்கம்: வெயிட்டிங் லிஸ்ட்டில் 7000 பேர்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 25 முதல் நவம்பர் 5ம் தேதி வரை 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுவரை 7000 பேர் வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளனர். தீபாவளிக்கு சரியாக இன்னும் 10 நாட்களே உள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக பயணிகள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். இதனால் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாமல் பலர் தவித்து வருகின்றனர். எனவே 40 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

அதன்படி, அக்.25 முதல் நவ.5 வரை மொத்தம் 40 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக அக்.25 முதல் சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை, குமரி, கோவை, திருவனந்தபுரம் வழித்தடத்திலும், சென்ட்ரலிலிருந்து மங்களூரு, பெங்களூரு, மைசூர் வழித்தடத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இரண்டாவது கட்டமாக தீபாவளிக்கு முந்தைய தினத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அக்.29 மற்றும் நவ.5 ஆகிய தேதிகளில் சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில் மற்றும் கோவைக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல அக்.30ம் தேதி நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தவிர மங்களூருக்கு நவ.2ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரை பொறுத்தவரை, அக்.30 மற்றும் நவ.2 ஆகிய தேதிகளில் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவற்றை தவிர, கொச்சுவேலி-பெங்களூரு, சென்னை-அகமதாபாத் போன்ற வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. இதுவரை ரயில் டிக்கெட் கிடைக்காமல் சுமார் 7000க்கும் அதிகமானோர் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தீபாவளியை முன்னிட்டு அக். 25 முதல் நவ.5 வரை 40 சிறப்பு ரயில் இயக்கம்: வெயிட்டிங் லிஸ்ட்டில் 7000 பேர் appeared first on Dinakaran.

Related Stories: