ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீஸ் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு, ஆட்கொணர்வு மனுவும் முடித்து வைப்பு

புதுடெல்லி: ஈஷா யோகா மையத்துக்கு எதிரான புகார்கள், பதியப்பட்டுள்ள வழக்குகளை தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க தடையில்லை என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பெண்களின் தந்தை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தனது மகள்கள் லதா, கீதா ஆகியோரை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டு தர கோரி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘இந்த விவகாரத்தில் ஈஷா யோகா மையம் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஈஷா யோகா மையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததோடு உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றினர். அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் லூத்ரா மற்றும் குமணன், “ஈஷா மையத்தில் விதிமுறை மீறல்கள் உள்ளன.

குழந்தைகளுக்கு, பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அரசு செயல்பட்டுதானே ஆக வேண்டும். அதனை வேடிக்கை பார்க்க முடியாது. ஈஷா மையத்துக்கு எதிராக இருக்கும் வழக்குகளுக்கு எந்தவித தடையும் விதிக்க கூடாது” என்று தெரிவித்தனர். தொடர்ந்து ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் மேற்கண்ட இரண்டு பெண்களும் தங்கள் விருப்பத்தின்படியே ஈஷா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஈஷா மையத்துக்கு எதிராக கலங்கம் ஏற்படுத்தும் விதமாக எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளன.

அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ஒரு புகார் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளபோது அதன் மீதான விசாரணைக்கு எப்படி தடை விதிக்க முடியும்? என கேள்வி எழுப்பி அவரது கோரிக்கையை நிராகரித்தார். தொடர்ந்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், “மேற்கண்ட இரண்டு பெண்களும் சொந்த விருப்பப்படியே ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால், அவரது தந்தை காமராஜ் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது கூடுதல் உத்தரவு எதுவும் தேவை இல்லை.

எனவே அது முடித்து வைக்கப்படுகிறது. பெற்றோர்கள் வேண்டுமானால் ஈஷா மையத்திற்கு சென்று அங்கிருக்கும் உங்களது மகள்களை பார்க்கலாம். அதேசமயம், ஈஷா மையத்துக்கு எதிராக நிலுவையில் உள்ள புகார்கள், எப்ஐஆர்கள், முந்தைய நிலுவை வழக்குகள் ஆகியவற்றை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு எந்தவித தடையும் இல்லை. அதுபோன்று உத்தரவை பிறப்பிக்கவும் முடியாது. சட்டத்துக்குட்பட்டு விசாரணையை மேற்கொள்ளலாம். அதனை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

The post ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை தமிழக போலீஸ் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு, ஆட்கொணர்வு மனுவும் முடித்து வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: