வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி அடுத்த வாரம் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி: ராகுல் காந்தியும் உடன் பங்கேற்பு

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி அடுத்த வாரம் பிரசாரத்தை தொடங்குகிறார். வயநாடு தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்தத் தொகுதி உருவான 2009 முதல் காங்கிரஸ் கூட்டணிதான் இங்கு வெற்றி பெற்று வருகிறது.2019ல் நடைபெற்ற தேர்தலில் ராகுல் காந்தி 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தியும், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யன் மொகேரியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜ கூட்டணி வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போட்டியிட்ட மாநிலத் தலைவர் சுரேந்திரனுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரியங்கா காந்தி அடுத்த வாரம் வயநாட்டில் பிரசாரத்தை தொடங்குகிறார். 22 அல்லது 23 ஆகிய தேதிகளில் அவர் வயநாடு வர திட்டமிட்டுள்ளார். 25ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியுடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்திற்கு வர உள்ளார். இருவரும் சேர்ந்து வயநாடு தொகுதியில் பல்வேறு பகுதிகளில் ரோடு ஷோ மற்றும் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

முதல் கட்டமாக பிரியங்கா காந்தி ஒரு வாரம் தொடர்ந்து வயநாட்டில் முகாமிட்டு பிரசாரம் நடத்துவார் என்று கூறப்படுகிறது. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவிலும் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கும் பிரசாரத்திற்கு பிரியங்கா காந்தி செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்த பின்னர் இரண்டாம்கட்ட பிரசாரத்தை வயநாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்.

* தேர்தல் மன்னன் பத்மராஜன் 244வது முறையாக மனு
இடைத்தேர்தல் நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளிலேயே முதல் நபராக தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மேகஸ்ரீயிடம் அவர் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 25ம் தேதி. 28ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 30ம் தேதி கடைசி நாள்.

The post வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டி அடுத்த வாரம் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி: ராகுல் காந்தியும் உடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: