மாவட்டம் முழுவதும் தொடர்மழையால் 1000 நர்சரிகளில் நாற்றுகள் முற்றிலும் நாசம்

* பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், சூளகிரி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட நர்சரிகளில் நாற்றுகள் அழுகி சேதமடைந்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனஹள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. காலை சுமார் 8 மணி வரை நீடித்த மழையால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால், சாரல் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சிரமத்துடன் சென்றனர். தொடர்ந்து காலை 10 மணி முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. பிற்பகல் 1 மணியளவில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு உள்ள இடங்களில், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடியதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக, கிருஷ்ணகிரி நகரில் பெங்களுர் சாலை, 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து குளம் போல் தேங்கியது. இதில் வாகனங்கள் ஊர்ந்தபடியும், நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோல், கிருஷ்ணகிரி நகரில் மழை காரணமாக அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சூளகிரி பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால், சூளகிரி, பி.எஸ்.திம்மசந்திரம், நெரிகம், கே.என்.தொட்டி, சின்னாரன்தொட்டி, பேரிகை, வெங்கடேசபுரம், ஆலூர், புக்கசாகரம், பேரண்டப்பள்ளி, கானலட்டி, கும்பளம், பண்ணப்பள்ளி, பி.குருபரப்பள், அத்திமுகம், உத்தனப்பள்ளி, சானமாவு, பீர்ஜேப்பள்ளி, சாமனப்பள்ளி, ஏனுசோனை, அயர்னப்பள்ளி, உள்ளட்டி, காளிங்காவரம், இம்மிடிநாயக்கனப்பள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் கொத்தமல்லி, புதினா, தக்காளி, மிளகாய், கேரட், பீட்ரூட், நூல்கோல், காலிபிளவர், முள்ளங்கி, கத்தரிக்ககய் போன்ற விளைபொருட்களை பயிரிட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான நாற்றுகளை விற்பனை செய்ய, இந்த பகுதியில் மட்டும் சுமார் 1000க்கும் மேற்பட்ட நர்சரிகள் உள்ளது. தொடர் மழையால் பல லட்சக்கணக்கான நாற்றுகள் அழுகி நாசமடைந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நர்சரி உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு: அதிகபட்சமாக பாரூரில் 34.6 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. இதேபோல் நெடுங்கல் – 26 மி.மீ., பெணுகொண்டாபுரம் – 25.2 மி.மீ., ராயக்கோட்டை – 20 மி.மீ., கிருஷ்ணகிரி – 19.2 மி.மீ., சின்னாறு டேம் – 17 மி.மீ., போச்சம்பள்ளி – 17 மி.மீ., கிருஷ்ணகிரி டேம் – 16.2 மி.மீ., சூளகிரி – 15 மி.மீ., பாம்பாறு டேம் -13 மி.மீ., மி.மீ., ஊத்தங்கரை- 11.4 மி.மீ., ஓசூர் – 11.1 மி.மீ., தேன்கனிக்கோட்டை – 11, கெலவரப்பள்ளி டேம் – 7 மி.மீ., என மொத்தம் 243.7 மி.மீ மழை பதிவாகியிருந்தது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 425 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 481 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 41.49 அடியாக இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 426 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அரைநாள் விடுமுறையால் அதிருப்தி

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் அரைநாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் சரயு உத்தரவிட்டார். அதில், மழை நின்ற பின்பு அனைத்து மாணவ, மாணவிகளையும் பாதுகாப்பாக பள்ளி வாகனங்களில் அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகே பள்ளியில் இருந்து அனைத்து ஆசிரியர்களும் செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார். மாவட்டத்தில் காலை முதலே விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கலெக்டர், கல்வித்துறை எவ்வித அறிவிப்பு வெளியிடவில்லை. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மழையில் நனைந்தபடியே சென்றனர். அதேவேளையில் மதியம் கனமழை பெய்த நிலையில், 2 மணிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

The post மாவட்டம் முழுவதும் தொடர்மழையால் 1000 நர்சரிகளில் நாற்றுகள் முற்றிலும் நாசம் appeared first on Dinakaran.

Related Stories: