×

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

திருப்போரூர், அக்.4: மாம்பாக்கம் சாலையில் செயல்படாத சிக்னல்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் சாலையில் மாம்பாக்கம் உள்ளது. சென்னை மேடவாக்கம், வண்டலூர், கேளம்பாக்கம், காயார் ஆகிய நான்கு முனை சந்திப்பாக மாம்பாக்கம் பகுதி உள்ளது. இதனால், இந்த சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.

தொடர், விபத்துகள் நடைபெற்று வந்ததால் இந்த சாலையைக் கடக்கும் வாகனங்கள் சிக்னலை மதிப்பதில்லை என்று கூறி தாழம்பூர் போலீசார் சாலைத்தடுப்பு அமைத்து சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றிவிட்டனர்.
இதனால், கேளம்பாக்கத்தில் இருந்தும், காயார் பகுதியில் இருந்தும் மேடவாக்கம், வேளச்சேரி செல்லும் வாகனங்கள் சாலையை நேரடியாக கடக்காமல் ஒன்றரை கிமீ தூரம் சென்று யூ டர்ன் எடுத்து வர வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, மேடவாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் வாகனங்களும், வண்டலூரில் இருந்து காயார், இள்ளலூர் செல்லும் வாகனங்களும் நேரடியாக திரும்ப முடியாமல் 1 கிமீ தூரம் சென்று சோனலூர் பகுதியில் யூ டர்ன் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், யூ டர்ன் எடுக்கும் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறையினரிடம் வேண்டுகோள் வைத்தும் பலனில்லாத நிலையே உள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் மாம்பாக்கம் சிக்னல் பகுதியை கடப்பதற்கு சுமார் 1 மணி நேரமாவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். சுமார் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

மாம்பாக்கம் சந்திப்பில் போலீஸ் பூத் ஒன்றும் உள்ளது. சிக்னலை பழுது நீக்கி போக்குவரத்து போலீசாரை நியமித்து சாலைத்தடுப்புகளை அகற்றி விதிகளை மதிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தால் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், போதிய போலீசார் இல்லாததால் போலீஸ் பூத் பூட்டப்பட்டு கிடக்கிறது. ஆகவே, மாம்பாக்கம் சந்திப்பில் போடப்பட்டுள்ள சாலைத்தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றும், போக்குவரத்து சிக்னலை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள போலீஸ் பூத்தில் காலை முதல் மாலை வரை போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mambakkam ,Tirupporur ,Vandalur road ,Kelambakkam ,Chennai Medavakkam ,Vandalur ,Kayar ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பகுதியில் இரவு...