×
Saravana Stores

ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்திற்காக 64 கிலோ தங்கம் வாங்க அரசு டெண்டர்


சென்னை: சமூக நலத்துறையில் ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக 4 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன இந்த திட்டத்தில் பயன் பெறுவோர்க்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு தேவையான தங்கத்தை வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சமூக நல ஆணையரகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: சமூகநலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் 4 வகையான திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு வழங்க தேவைப்படும் 8,000 எண்ணிக்கையிலான 8 கிராம் (22 கிராம்) தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தங்க நாணயங்கள் மற்றும் ஆபணரங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்களிடம் இருந்து மின் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி வரும் 23ம் தேதி (நேற்று) முதல் 22.10.2024 மாலை 3 மணி வரை பெறப்படும். ஒப்பந்தப்புள்ளிகள் 22.10.2024 அன்று மாலை 4 மணியளவில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்ன் கல்லூரி வளாகத்தில் ஒப்பந்தப்புள்ளி கூர்ந்தாய்வு குழுவால், சமூக நல ஆணையர் முன்னிலையில் சமூக நல ஆணையரால் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி படிவத்தினை http://tntenders.gov.in என்ற இணையதளத்தில் இருந்து 23.9.2024 முதல் 22.10.2024 பிற்பகல் 1 மணி வரை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முன்கூட்டம் 8.10.2024 அன்று காலை 11.30 மணியளவில் சமூக நல ஆணையத்தில் நடைபெற உள்ளது. இதர நிபந்தனைகள் ஒப்பந்தப்புள்ளி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு 8 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா 8 கிராம் என்ற அடிப்படையில் மொத்தம் 64,000 கிராம் (64 கிலோ) தங்கம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 45 கோடி செலவிட அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்திற்காக 64 கிலோ தங்கம் வாங்க அரசு டெண்டர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பாரிமுனையில் பழைய விடுதி கட்டடம் இடிந்து விழுந்தது