சென்னை: சென்னை – பெங்களூரு விரைவுச்சாலை பணிகளில் தமிழகத்தில் 65 % நிறைவடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஓவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை மாநிலத்தில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக இலக்கை அடைய பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தணிச்சையாகவும், மாநில அரசுடன் இணைந்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் வகையில் 262 கீ.மீ. நீளத்திற்கு பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் 26 இடங்களில் இது போன்ற பசுமை வழி விரைவு சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வருகிறது. கடந்த மே மாதம் 2022ம் ஆண்டு சென்னை- பெங்களூர் விரைவு சாலை தொடங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும். சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே தற்போது இரண்டு வழிகள் உள்ளது. அதில் சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, பெரும்புதூர், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சந்தபுரா, எலக்ட்ரானிக் சிட்டி வழியாக பெங்களூருவுக்கு 372கி.மீ. நீளமுள்ள என்.எச் 48 தேசிய நெடுஞ்சாலை, அதேபோல கோயம்பேடு, பூந்தமல்லி, பெரும்புதூர், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சித்தூர், முல்பகால், ஓசகோட்டே வழியாக பெங்களூருவுக்கு 335கி.மீ. நீளமுள்ள என்.எச்.75 தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டு வழிகள் உள்ளது.
தற்போது அமைக்கபட்டு வரும் விரைவு சாலை தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமையவுள்ளது. பெங்களூர்வுக்கு வெளியே உள்ள ஓசகோட்டே மற்றும் சென்னைக்கு வெளியே உள்ள பெரும்புதூர் இந்த விரைவு சாலையின் நிறைவு இடங்களாக இருக்கும். ராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாளையம், பலமனேர், கோட்டா, வெங்கட்டகிரி, கோளார், பங்கார்பெட், மாலூர் வழியாக இந்த விரைவு சாலை செல்கிறது. தற்போது சென்னையில் இருந்து பெங்களுரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும் நிலையில், இந்த விரைவு சாலையில் 262 கிலோ மீட்டர் தூரத்தை 2 முதல் 3 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த விரைவு சாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது, தமிழ்நாட்டில் 85 கி.மீ. நீளமும், ஆந்திராவில் 71 கி.மீ. நீளமும், கர்நாடகவில் 106 கி.மீ. நீளமும் சாலை அமைகிறது. ₹17,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரைவு சாலை 4 வழிச்சாலையாக அமைக்கப்படவுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும் பட்சத்தில் 8 வழிச்சாலையாகவும் மாற்றும் திட்டம் உள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வாலாஜாபேட்டையில் இருந்து அரக்கோணம் வரையிலான 24.50 கி.மீ சாலை பணிகள் சுமார் 84 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ளது. இந்தபிரிவில் குடிமராமத்து பணிகளுக்காக ₹662.7 கோடி, பயன்பாடுகளுக்காக ₹20.46 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. குடிபாலா – வாலாஜா பகுதியில் 24 கி.மீ சாலை பணிகள் 70 %, காஞ்சிபுரம் – பெரும்புதூர் வரையிலான 31.07 கி.மீ சாலையில் 64%, அரக்கோ ணம் – காஞ்சிபுரம் வரையிலான சாலை பணிகள் 52 % நிறைவடைந்துள்ளது. இத்திட்டம் பசுமைவெளியை உள்ளடக்கியதால், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவில்லை. விரைவுச்சாலையில் இருந்த மின்கோபுரங்களை மாற்றுவதில் சவால்கள் இருந்தது. சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.
இதனையடுத்து சென்னை மற்றும் பெங்களூரு இடையே நடைபெற்று வரும் பணிகளில், தமிழகத்தில் 65 % நிறைவுபெற்றுள்ளது. இவை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கி 105.7 கி.மீ தொலைவிற்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரைவுச்சாலை பெரும்புதூரில் தொடங்கி ஆந்திர மாநிலத்தின், குடிபாலா பகுதியில் முடிவடைந்து பெங்களூருவை அடைகிறது. இப்பணிகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும். இவை சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான பயண தூரத்தை கணிசமாக குறைக்கும். மேலும் இந்த விரைவு சாலையில் மதுரவாயல் முதல் காஞ்சிபுரம் வரையிலாக 60 கி.மீ. தூரத்திற்கான புதிய சாலை, சாலை விளக்குகள், ரப்பர் வேகத்தடை உள்ளிட்டவைகளை அமைத்து சாலையை சீரமைத்து பராமரிப்பதற்காக ₹8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விரைவு சாலையில் ஏற்படும் சாலைவிபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகை
சென்னை, பெங்களூர் ஆகிய 2 முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த விரைவு சாலை நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகள் சென்னை துறைமுகத்துடன் இணைக்கப்படும்.
நுழைவு கட்டுப்பாடு சாலை
இந்த விரைவு சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையதால் நுழைவு கட்டுப்பாடு சாலையாக செயல்படுத்தப்படவுள்ளது. நுழைவு கட்டுப்பாடு சாலை என்றால் விரைவு சாலையில் என்ன வாகனங்கள் பயணிக்க வேண்டும், சாலையில் பயணிக்க வேக கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை பூர்த்தி செய்யும் வாகனங்கள் மட்டுமே பயணிக்க முடியும்.
6சுங்க சாவடிகள்
34 பெரிய பாலங்கள், 31 சிறிய பாலங்கள் இடம்பெற்றுள்ளன. இவை ஒருங்கிணைந்து 15 கி.மீ தொலைவிற்கு இருக்கும். இதில் 840 மீட்டர் தொலைவிற்கு நீளமான பாலம் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தில் 6 சுங்கச்சாவடிகள் இயக்கப்படவுள்ளது.
The post சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை பணி தமிழ்நாட்டில் 65% நிறைவு: விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.