தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை

சென்னை: தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் மீது டாக்டர் காந்தராஜ் மீது சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டி தலைவரான நடிகை ரோகிணி, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் ஒன்று அளித்தார். அதில், தனியார் யூடியூப் சேனலில் கடந்த 7ம் தேதி ‘சினிமாவில் விபச்சாரி நடிகைகள் பட்டியலை வெளியிட்ட டாக்டர் காந்தராஜ்’என்ற தலைப்பில் கலந்துரையால் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், டாக்டர் காந்தராஜ் சினிமாத்துறை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் பேசியுள்ளார்.

மறைந்த நடிகைகள் மஞ்சு முதல் தற்போது புகழில் உள்ள ஷகிலா வரை எடுத்துக்காட்டாக கூறி அவர்களுடைய வாழ்க்கை, நடத்தை என தனக்கு சம்மந்தமில்லாத, ஆதாரமும் இல்லாத தகவல்களை கூறி பேட்டி அளித்ததோடு, அதன் மூலமாக நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமராமேன், எடிட்டர், மேக்கப்மேன், இயக்குநர் என விருப்பப்படுகிற அனைவரிடமும் ‘அட்ஜஸ்மென்ட்’ என்ற பெயரில் விபச்சாரம் செய்துதான் நடிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் காந்தராஜ் மீது பிஎன்எஸ் 296, 75(1)(4), 352, ஐடி உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் காந்தராஜை கைது செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

The post தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு: சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: