தேன்கனிக்கோட்டை அருகே காதலித்தபோது எடுத்த படங்களை காட்டி கல்லூரி மாணவிக்கு மிரட்டல்


* வாலிபரை கைது செய்ய கோரி உறவினர்கள் மறியல்
* ரூ44 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக தாய் பதிலடி

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே காதலித்தபோது எடுத்த படங்களை காட்டி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாசிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரப்பா(பெயர் மாற்றம்). கூலி தொழிலாளி. இவரது 18 வயது மகளான மாணவி. தளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: நான் பாலக்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். சாரண்டப்பள்ளியை சேர்ந்த சிவராஜ் மகன் சுபாஷ் (25), 2 டிப்பர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார்.

இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தோம். இதையறிந்த எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுபாசுடன் போனில் பேசும்போது சண்டை வந்தது. நான் அவரை தொடர்ந்து காதலிக்க முடியாது எனவும், இனிமேல் என்னிடம் பேச வேண்டாம் எனவும் சொல்லி, சுபாசுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். இதையடுத்து சுபாஷ், நாங்கள் காதலிக்கும் போது ஜோடியாக எடுத்து கொண்ட போட்டோக்களை போனில் ஸ்டேட்டஸ் வைத்து கொண்டு உறவினர் பசுவராஜன் என்பவரிடமும் என் அப்பாவிடமும் என்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு, நீ என்னை கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்றால், அறுத்துக்கொண்டு, எனது இறப்புக்கு நீயும், உன் குடும்பத்தாரும்தான் காரணம் என்று கூறி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றை அழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார், இருவரது பெற்றோர்களை நேரில் அழைத்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் மாணவி கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று பேச்சுவார்தை நடத்தினர். அப்போது, சுபாஷ் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யவேண்டும்’ என்றனர். டிஎஸ்பி சாந்தி உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து அதற்கான நகல் கொடுத்தார். ஆனால் சுபாசை சிறையில் அடைக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் எனக்கூறி அங்கேயே நின்றிருந்தனர். இதற்கிடையே தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், சம்பவ இடத்துக்கு வந்து, ‘டிஎஸ்பி கைது செய்வதாக உறுதியளித்துள்ளார்’ என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனிடையே சுபாசின் தாய், தளி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘எனது மகன் சுபாசும், மாணவியும் காதலித்து வந்தனர்.

மாணவியின் உறவினர், என் மகனுக்கு அப்பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பெங்களூரு அழைத்து சென்று, எங்களது நிலம் விற்ற ரூ44 லட்சத்தை அவருடைய உறவினர் மற்றும் மாணவி பெற்று கொண்டு, அந்த பணத்தில் நகை வாங்கினர். தற்போது நாங்கள் வேறு ஜாதி, நீங்கள் வேறு ஜாதி என கூறி மாணவியின் பெற்றோர், சிலரின் தூண்டுதலின் பேரில் என் மகன் மீது புகார் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது சம்பந்தமாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post தேன்கனிக்கோட்டை அருகே காதலித்தபோது எடுத்த படங்களை காட்டி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: