தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது

தர்மபுரி: தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி செய்த விவகாரத்தில் வட்டார கல்வி பெண் அலுவலர் மற்றும் அவரது கணவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உட்பட 3 பேரை தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் கடந்த 2016ம் ஜனவரி மாதம் தனியார் பள்ளியை தொடங்கும்போது, பள்ளிக்கு பங்குதாரர்கள் தேவை என விளம்பரம் செய்திருந்தனர். அதன்பேரில் ஒரு பங்கு ரூ.25 லட்சம் என்று கூறி சுமார் 100 பேரிடம் பங்குத் தொகை வசூலித்து பள்ளியை நடத்தினர். இதற்கு பங்குதாரர்களாக வந்தவர்களிடம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஆனால், ஒப்பந்தப்படி பங்குதாரர்களுக்கு பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் பங்குதாரர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர், ரூ.12.23 கோடி முதலீடு செய்த பங்குதாரர்களை மோசடி செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 15 பேர் மீது புகாரளித்தார்.

இந்த புகாரைத்தொடர்ந்து தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் கல்வி நிறுவனத்தில் முதலீடு தொகையை ஈட்டுவதற்காக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் (67), ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா (59), அவரது கணவர் செல்வம் (65) ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீட்டைப் பெற்றுக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். நாட்றம்பள்ளியை சேர்ந்த பார்த்தசாரதியிடம் ரூ.85 லட்சம், மணி என்பவரிடம் ரூ.23 லட்சம், நாகராஜிடம் ரூ.45 லட்சம், சாமுண்டீஸ்வரி, தேவிபாலா ஆகியோரிடம் ரூ.25 லட்சம், சரவணனிடம் ரூ.25 லட்சம், இளங்கோவிடம் ரூ.25 லட்சம், தரிடம் ரூ.20 லட்சம், ராமசுந்தரத்திடம் ரூ.3 கோடியே 25 லட்சம், ராஜம் என்பவரிடம் ரூ.1.75 கோடி, கஜேந்திரனிடம் ரூ.3 கோடி, சுரேஷ்குமார் ரூ.1.35 கோடி என மொத்தம் ரூ.12.23 கோடி முதலீடாக பெற்று தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

இந்நிலையில் பங்குதாரர்களுக்கு கடந்த 7 வருடங்களாக முதலீட்டிற்கு உண்டான லாபம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில் தான் வசந்தகுமார் தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, மோசடியை கண்டுபிடித்தனர். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், நாட்றம்பள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேரையும் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பள்ளியின் தலைவர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தனியார் பள்ளியில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி ரூ.12.23 கோடி மோசடி வழக்கில் பெண் கல்வி அதிகாரி கைது appeared first on Dinakaran.

Related Stories: