திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் அதிகார பகிர்வை மையமாக வைத்து செயல்படவில்லை: வீடியோ குறித்து திருமாவளவன் விளக்கம்

திருச்சி: ‘அதிகார பகிர்வை மையமாக வைத்து திட்டமிட்டு விசிக செயல்படவில்லை. திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை’ என்று திருமாவளவன் தெரிவித்து உள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமூக வலைத்தளத்தில் எனது பதிவுகள் அழிக்கப்பட்டதாக தகவல் தெரிந்த பிறகு முறையாக பதிவு செய்யுமாறு எனது அட்மினுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

நான் அனைத்து நேரங்களிலும் பதிவு போட இயலாது. நான் தலைமை பொறுப்பேற்ற பிறகு பத்தாண்டு காலம் தேர்தலை புறக்கணித்து உள்ளோம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை தொடர்ச்சியாகவே சொல்லி வருகிறோம். கூட்டணியில் இருந்து கொண்டே மக்களின் பிரச்னைக்காக கூட்டணியின் எதிரணியோடு இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாமக விமர்சிக்கவில்லை, எங்களது முன்னெடுப்பை வரவேற்றுதான் பேசியுள்ளார்கள்.

பாமகவை பற்றி நான் சொல்லக்கூடிய கருத்தை பற்றி தான் கண்டித்து உள்ளார்கள். அப்படி சொல்ல வைத்தது அவர்கள் தான். முதன் முதலில் சிதம்பரத்தில் நான் தேர்தலில் நின்ற போது வன்முறையை தூண்ட காரணம் அவர்கள் தான். விசிகவிற்கு எதிராக திட்டமிட்டு பாமக அவதூறு பரப்பியது. நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை, நாங்கள் காயப்படுத்தப்பட்டோம். தமிழர் நலனுக்காக நாங்கள் ரத்த கரையுடன் பாமகவிடம் கடந்த காலங்களில் கைகோர்த்தோம். தலித் சமூகத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக என்பதை மறுக்க முடியாது.

அதைத்தான் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன். அவர் மது ஒழிப்பு குறித்த கருத்தில் நிலைப்பாடாக இருக்கிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை. பாஜ தனி பெரும்பான்மையுடன் இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அதிகார பகிர்வு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதும் தவறல்ல. அந்த கோரிக்கையை நாங்கள் எழுப்புவதிலும் தவறில்லை. அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது தான் உண்மையான ஜனநாயகம். அதிகாரத்தை குவிப்பது ஜனநாயகம் அல்ல. கூட்டணி ஆட்சி அமைவது என்பது இயல்பாக மக்களிடமிருந்து எழும் கோரிக்கை யாகும். அதிகார பகிர்வை மையமாக வைத்து திட்டமிட்டு விசிக செயல்படவில்லை. நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதில் ஒன்றும் பிரச்னை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* நாங்கள் எல்.கே.ஜிதான் வருத்தப்பட ஒன்றும் இல்லை அன்புமணிக்கு பதிலடி
தஞ்சாவூரில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: மதுவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்கும் போது, ஏன் சேர்ந்து குரல் கொடுக்க கூடாது. அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் மதுக்கடைகளை மூட முடியும். நாங்கள் எல்.கே.ஜி தான். பாமக பி.எச்.டி தான், இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் அதிகார பகிர்வை மையமாக வைத்து செயல்படவில்லை: வீடியோ குறித்து திருமாவளவன் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: