செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் வருவாய், வரி சார்ந்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: சமூக வலைதளங்களின் பங்களிப்பு இன்று அதிகரித்து வருகிறது, பொருளாதாரம் குறித்து பலரும் அதில் பேசுகின்றனர். ஆனால் 10 நபர்கள் சரியான தகவலை கூறுகின்றனர் என்றால் 100 நபர்கள் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். வருவாய், வரி சார்ந்த வழக்கறிஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பொருளாதாரம், முதலீடு குறித்து சரியான தகவலை பதிவு செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியை நோக்கி இருக்கிறது. பல துறைகளுக்கு உதவியாக இருக்கும் நிலையில் நீங்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியது அவசியம். இதன் மூலம் கடினமான விஷயத்தை தீர்க்க உதவும். மக்களிடமும் புரிய வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகளின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: டிஜிட்டல் புரட்சி இந்தியாவில் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு இருக்கும் உறவுகளுக்கு உடனடியாக பணம் அனுப்பும் வகையில் வளர்ச்சி இருக்கிறது. ஆப்பிள் தொலைபேசி இல்லை என்றாலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வளர்ச்சி தான் காரணம். ஜி.எஸ்.டி யில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டியது அவசியம். மேலும் நம் நாட்டின் வளர்ச்சியை எடுத்து பேச ஆரம்பித்தால், ஒரே நாடு ஒரே வரி விதிப்பின் சாத்தியம் குறித்து யோசிக்க வேண்டும். சாத்தியம் இருக்கிறதா, இல்லையா என்று நான் இப்போது கூற முடியாது. கிரிப்டோ கரன்ஸி முறைப்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். இதை பயன்படுத்துவர்கள் போதை பொருள் கடத்தல், தீவிரவாதம் ஆகியவைக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்த வேண்டும்: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: