முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 11, 12 தேதிகளில் கோவை வந்த அவர், முத்ரா கடன் வழங்கியிருப்பது குறித்து ஆதாரமற்ற புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது கூற்றின்படி இதுவரை நாடு முழுவதும் 49.5 கோடி வங்கி கணக்குகள் இருப்பதாகவும், மொத்தம் 29.76 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் தமிழகத்தில் 5.6 கோடி பேருக்கு ரூபாய் 3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறியதோடு கோவை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் பேருக்கு ரூபாய் 13 ஆயிரத்து 180 கோடி முத்ரா யோஜனா கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டதும் அரங்கத்தில் அமர்ந்திருந்த சிறு, குறு நடுத்தர தொழில் முனைவோர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.  தமிழகத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 8 கோடி பேர் என்று வைத்து கொண்டால் அதில் 5.6 கோடி பேருக்கு கடன் வழங்குவதாக கூறியதும், கோவையில் 35 லட்சம் பேர் வசிக்கும்போது, அதில் 20 லட்சம் முத்ரா கடன் வழங்கியதாக கூறுவதையும் அங்கே கூடியிருந்த எவராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுகொள்ளவும் முடியவில்லை.

ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் துணிந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு அவரது அராஜகப்போக்கை மேலும் நிலைநாட்டியுள்ளார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 30 கோடி, 2022 நிலவரப்படி 32 கோடி, அதேபோல, தமிழகத்தில் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 19 கோடி. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 41.43 லட்சம் பேர் தான் இருக்கிறார்கள்.

இதில் 20 லட்சம் பேருக்கு முத்ரா கடன் வழங்கியிருப்பதாக கூறுவதும், அதேபோல நாடு முழுவதும் 31 கோடி குடியிருப்புகள் இருக்கிற நிலையில் 49.5 கோடி முத்ரா கடன் வழங்கியிருப்பதாக கூறியிருப்பதும், ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என்றுதான் கூறவேண்டும்.
எனவே, கள நிலவரத்திற்கு விரோதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிற கூற்றை நிரூபிக்கிற வகையில் தமிழகத்தில் 2023-24ஆம் நிதியாண்டில் எவ்வளவு பேருக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அதனுடைய மொத்த தொகை என்ன என்பதை மாவட்ட வாரியாக புள்ளிவிவரங்கள் கொண்ட ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்

The post முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: