திருமயத்தில் பொதுமக்களின் அலட்சியத்தால் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கும் குப்பைகள்

*ஊராட்சி நிர்வாகம் வேதனை

திருமயம் : திருமயத்தில் பொதுமக்களின் அலட்சியத்தால் கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்குவதாக ஊராட்சி நிர்வாகம் வேதனை தெரிவித்தது.நாடு முழுவதும் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் ஒருபுறம் இருக்க பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தப்படும் சிறுசிறு கழிவுகளும் ஆங்காங்கே தேங்குவதால் தொழிற்சாலை இல்லாத கிராமங்களில் கூட தற்போது சுற்றுச்சூழல் கேள்விக்குறியாக உள்ளது.

இதனை தடுக்க அரசு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்கள் பேரணிகள் என நடத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அனைவரும் நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முயற்சி செய்கிறோமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அதேசமயம் அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒரு சில நேரங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதனை மக்கள் நீர்த்துப்போக செய்கின்றனர்.

உதாரணமாக பிளாஸ்டிக் பை பயன்படுத்த அரசு தடை விதித்த போதிலும் அதனை மக்களும், வியாபாரிகளும் பின்பற்றுவதாக தெரியவில்லை. இந்த விஷயத்தில் மக்கள் மீது வியாபாரிகளும் வியாபாரிகள் மீது மக்களும் மாறி மாறி குறை சொல்கின்றன. எதுவாயினும் ஒவ்வொரு தனி மனிதனின் முயற்சியே அரசின் அனைத்து அறிவிப்புகளும் வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இப்படியாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும் திருமயம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு அரசு அலுவலகங்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஊராக திருமயம் உள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் ஊராட்சி சார்பில் 5 முதல் 7 டிராக்டர் வரை குப்பைகள் வாரி கொட்டப்படுகிறது. ஒரு நாள் குப்பை அள்ளுவதை நிறுத்திவிட்டாலும் திருமயம் நகர் பகுதி குப்பை மேடாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க குடியிருப்பு வாசிகள் சுற்றுச்சூழல் பற்றி சிறிதும் அக்கறையின்றி கழிவு நீர் கால்வாயில் குப்பைகளை கொட்டுவதாக புகார் எழுந்து வருகிறது. குப்பை தேங்குவது ஒரு புறம் இருக்க அதனை அள்ளுபவர்கள் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாது ஊராட்சிக்கு பண விரயம் ஏற்படுகிறது. எனவே திருமயம் வணிக வளாக உரிமையாளர்கள், பொதுமக்கள் குப்பைகளை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டுமாறு ஊராட்சி பலமுறை வலியுறுத்தியும் ஒரு சிலர் அதனை கடைப்பிடிப்பதில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஊராட்சி தலைவர் சிக்கந்தரிடம் கேட்டபோது:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளில் திருமயம் ஊராட்சி ஒன்று. இங்கு அதிக அளவு வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலா தளம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகள் உள்ளதால் திருமயம் ஊராட்சி மக்கள் மட்டுமல்லாது பல்வேறு பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திருமயத்திற்கு வந்து செல்கின்றனர்.

இதனால் திருமயம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மற்ற கிராம ஊராட்சிகளை விட அதிக அளவு குப்பை சேர்கிறது. எனவே திருமயம் நகர் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள தினந்தோறும் ஊராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே சமயம் திருமயம் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி சார்பில் போதுமான பணியாளர்கள் இல்லாத போதிலும் ஊராட்சி கூடுதலாக சுகாதார பணிக்காக செலவு செய்கிறது.

இதனிடையே திருமயம் ஊராட்சியில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், சுகாதாரம், மின்விளக்கு உள்ளிட்டவைகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் திருமயம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இதில் ஒரு சில பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அலட்சியத்தால் கழிவு நீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் கழிவு நீர் தேங்கி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊராட்சி பணியாளர்கள் தினந்தோறும் திருமயம் பகுதி முழுவதும் சேரும் கழிவுகளை அகற்றி வருகின்றனர்.

அவ்வாறு அகற்றும் போது பணியில் இருக்கும் ஊராட்சி ஊழியர்களுக்கு உடல் அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே திருமயம் பகுதி வாசிகள் சுற்றுச்சூழல், ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குப்பைகள் கொட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்ட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றனர்.

The post திருமயத்தில் பொதுமக்களின் அலட்சியத்தால் கழிவுநீர் கால்வாய்களில் தேங்கும் குப்பைகள் appeared first on Dinakaran.

Related Stories: