ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ராணிப்பேட்டை மாவட்டம் பாலு (எ) பொன்னை பாலு (39), சென்னை, திருநின்றவூர் சேர்ந்த ராமு (எ) வினோத் (38), புளியந்தோப்பு திருமலை (45), திருநின்றவூர் பகுதியை சேர்ந்த அருள் (32), திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (எ) மன்னா (25), ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை சந்தோஷ் (22), சென்னை, திருநின்றவூர் செல்வராஜ் (49), திருவள்ளூர் மாவட்டம், கள்ளிப்பட்டு சிவசக்தி (எ) சிவா (26), ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் விஜய் (எ) அப்பு (21), கோகுல் (25) ஆகிய 10 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் நேற்று குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், மேற்படி 10 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப் பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: