தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ₹23 கோடியில் பயிர் கடன்

* குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

தஞ்சாவூர் : கும்பகோணம் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.23 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் தற்போது வரை 43, 670 எக்டர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, மொத்தமாக 52,000 எக்டர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி, காம்ப்ள்க்ஸ் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுவருகின்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூரிற்கு ஷீமா பொது காப்பீடு நிறுவனமும், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் (AICL) நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.குறுவை நெற்பயிருக்கு பயிர் காப்பீட்டு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.730 மட்டும் பொது சேவை மையங்கள் மூலமாக, தேசிமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஜூலை 31 க்குள் பயிர் காப்பீடு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு 2024-ஆம் ஆண்டில் மண்வளம் காக்கும் வகையில் என்ற புதிய ’மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் முதல் இடுபொருளாக தக்கைப்பூண்டு விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்புவைக்கப்பட்டு 50% மானியத்தில்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் நெல் இயந்திர நடவு பின்னேற்பு மானியத்திற்கு 33,076 ஏக்கர் இலக்கு பெறப்பட்டு தற்போதுவரை 21,154 ஏக்கர் பதிவேற்றம் செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இயந்திர நடவு விவசாயிகள் அனைவரும் உழவர் செயலி மூலம் பதிவேற்றம் செய்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு 116 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரிசு நிலங்களில் முட்புதர்கள் அழிப்பு, தொழு உரம் வரப்பில் உளுந்து, உயிரி உரங்கள் நுண்ணூட்ட கலவை, உயிர் கட்டுப்பாட்டு காரணிகள். மற்றும் பேட்டரி தெளிப்பான்கள் விநியோகிக்கப்பட உள்ளது. மேலும் 1 தரிசு நில தொகுப்பு தேர்வு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஆடிபட்டத்திற்கு தேவையான வீட்டு காய்கறி விதை பொட்டலங்கள் ரூ.25 முழு விலையில் விவசாயிகள் தங்கள் வட்டர தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதர தோட்டக்கலை துறை திட்டங்களின் பயன்களை பெற பயனாளிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை tnhorticulture, tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

வேளாண் பொறியியல் துறை மூலமாக C மற்றும் D வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடபெற்று வருகிறது. C வாய்க்கால் தூர்வாரும் பணிகளுக்காக 367 கிலோ மீட்டர் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 316 கிலோ மீட்டர் நீளம் தூர்வாரப்பட்டுள்ளது. வேளாண் விற்பனை மற்றும் வணிகம் சார்பாக தற்போது வரை 567.05 மெட்ரிக் டன் பருத்தி 3.71 கோடி மதிப்பிற்கு 3646 விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டாலிற்கு சராசரியாக ரூ.6500 என விற்பனை குழுவால் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு புதிய உழவர் சந்தை அமைப்பதற்கு பேராவூரணி வட்டாரத்தில் மாவடுகுறிச்சி மேற்குவருவாய் கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது.கூட்டுறவுத்துறை சார்பில் 2024-25 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 23 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 6345 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளது. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2023-24-ஆம் ஆண்டின் கரும்பு அரவை பருவம் 04.12.2023 தேதியில் துவங்கப்பட்டு 24.03.2024 தேதியில் அரவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 16.03.2024 முதல் 24.03.2024 தேதி வரை கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு அரசின் வழிவகை கடன் கிடைக்கப் பெற்ற உடன் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின் உற்த்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மே மாதம் 32 புதிய மின்மாற்றிகள் ரூ. 1 கோடியே 12 இலட்சம் செலவில் மேம்பாடு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு, இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டு, சீரான மின்சாரம்வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் மற்றும் அலுவலர்கள், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ₹23 கோடியில் பயிர் கடன் appeared first on Dinakaran.

Related Stories: