திருவண்ணாமலை அடுத்த வெறையூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

*மனுக்களுக்கு உடனடி தீர்வு

*துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே வெறையூர் கிராமத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெறையூர் ஊராட்சியில் சு.வாளவெட்டி, சு.கம்பம்பட்டு, தி.வாளவெட்டி, வெறையூர், கல்லேரி, ஆருத்ராபட்டு, பனையூர், பெருமணம், தேவனூர், காடகமான், தி.வலசை, சு.நல்லூர், விருதுவிளங்கினான் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.அப்போது, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசியதாவது:

தமிழ்நாடு முதல்வர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அரசு நிர்வாகத்தை தேடி மக்கள் சென்ற காலம் மாறிவிட்டது. தற்போது, மக்கள் வசிக்கும் இடங்களை தேடி அரசு நிர்வாகம் சென்று மக்களுடைய கோரிக்கைகளை பெற்று உரிய தீர்வுகளை வழங்கி வருகிறது. மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை முதற்கட்டமாக நகராட்சிகளில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது, கிராமப்புற மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் இத்திட்டம் கிராமப்புறங்களில் தொடங்கி நடந்து வருகிறது.

மேலும் மனுக்களை அளித்து ஒப்புகை பெற்றுக்கொண்டால் ஒரு மாதத்திற்குள் அதற்கான தீர்வை கலெக்டர் மூலமாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை செய்து தருவார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முகாம்களில் பெறப்படும் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத அரசு துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 15 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணை ஆகியவற்றை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி, பிடிஓக்கள் பிருத்திவிராஜ், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பூ.அய்யாகண்ணு, தாசில்தார் சரளா ஆகியோர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, கொளத்தூர், நாரியமங்கலம், இராயம்பேட்டை, சிறுநாத்தூர் மற்றும் ஜமீன்கூடலூர் ஆகிய 7ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சுமார் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள் அனைத்து ஆவணங்களையும் கணினியில் பதிவேற்றி அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கினர்.மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணப்பட்ட 16பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றும் உள்ளிட்ட சான்றிதழ்களை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினார்.

 

The post திருவண்ணாமலை அடுத்த வெறையூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: