MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!

சென்னை: ஆன்லைன் செயலியில் விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடு பெற்று பல கோடி மோசடி செய்த வழக்கில், MY V3 ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் சென்னையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வழக்கில் ஜாமின் கோரிய சக்தி ஆனந்தனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 19ம் தேதி வரை சக்தி ஆனந்தனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் (Myv3Ads) மைவி3ஆட்ஸ் நிறுவனம், செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை தினசரி வருமானம் பெறலாம் என இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் செலுத்தும் பணத்திக்கேற்ப ஆயுர்வேதிக் மருந்துகள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களைச் சேர்க்கும் நபர்களுக்குத் தனியாக கூடுதல் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

இதனை நம்பி பல லட்சம் பேர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அண்மையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும், தினசரி விளம்பரங்கள் பார்ப்பதன் மூலம் அதிக வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசைகாட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் மைவி3 நிறுவனம் மீது, கோவை மாநகர காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து சக்தி ஆனந்தன் மீது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். இதேபோல மற்றுமொரு வழக்கில் MYv3ads நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

The post MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்! appeared first on Dinakaran.

Related Stories: