ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களுக்கு முன் டெல்லி ரயில் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி லோகோ பைலட்கள் உடன் சந்திப்பு மேற்கொண்டு அவர்கள் பணியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டார். இந்திய ரயில்களை இயக்கும் லோகோ பைலட்கள் மற்றும் அசிஸ்டன்ட் பைலட் பணியிடங்கள் 22 சதவிகிதம் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகையால் மிகவும் கடினமான சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். நீண்ட தூர ரயில்கள், தூக்கம் மற்றும் ஓய்வு இல்லை, அத்துடன் மன அழுத்தத்தில் வேலை செய்கின்றனர்.

ஏற்கனவே லோகோ பைலட், அசிஸ்டன்ட் பைலட், ரயில் கிரவுண்ட் மேனேஜர், ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் மானேஜர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்துக்கு முன்னதாக 5000 லோகோ பைலட்டுகள் நியம்மிக்கப்படவுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், ரயில் விபத்து நடந்து அடுத்த நாள் ஜூன் 18ம் தேதி 18,000 என அதிகரித்து அறிவித்ததன் பின்னணி என்ன? உண்மையில் அதை விட அதிகமான காலியிடங்கள் ரயில்வேயில் உள்ளது.

அத்துடன் ஜூன் 18 அன்று அறிவிக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்பட எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 1924ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட்டை, கடந்த 2016ம் ஆண்டு ஒன்றிய பாஜ அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர். இந்திய ரயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும்.

ஆனால் அவையெல்லாம் பாஜக அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம். ஒன்றிய பாஜ அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய ரயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி, இரயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து, அதை முறையாக பராமரித்து, சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: