யு.பி.ஐ டிக்கெட் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகளுக்கு வசதியாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் எஸ்.இ.டி.சி பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் டிக்கெட் பெறும்போது முறைகேடுகளை தவிர்க்கலாம் என்ற வகையில் இந்த முறை கொண்டுவரப்படுவதாக போக்குவரத்து கழகம் கூறியுள்ளது. தற்போது குறிப்பிட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்லாம். இந்த வசதிகள் இருந்தும் பெரும்பாலான நேரங்களில் பணம் கொடுத்துதான் பலரும் டிக்கெட் பெறுகின்றனர்.

இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்பொழுது தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கடந்த ஏப்.1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் கியூஆர் குறியீடு இவற்றின் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மேற்கண்டவாறு அதிகபட்சமான மின்னணு பண பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post யு.பி.ஐ டிக்கெட் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்கு பரிசு: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: