ஒன்றிய அரசின் பணியிட தேர்வுமுறையால் இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி: மதுரை எம்.பி கண்டனம்

மதுரை: மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு சார்ந்த சிபிஎஸ்இ பணியிட தேர்வு பிரிவு சார்பில் கடந்த மார்ச் 8ம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஏ, பி, சி பிரிவுகளில் 118 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் இந்தி மொழி தேர்வும் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த தேர்வர்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் பேர் முதற்கட்ட தேர்விலேயே வெளியேற்றப்பட்டு, 2ம் கட்ட தேர்வுக்கான வாய்ப்பை பறிகொடுக்கும் நிலை உள்ளது. பிரிவு ஏ – உதவி செயலாளர் (நிர்வாகம்) பணிக்கான முதற்கட்ட தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 300ல் இந்தி மொழி தேர்வுக்கு மட்டும் 30 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

பிரிவு பி – இளநிலை பொறியாளர் பணிக்கு மொத்த மதிப்பெண் 300ல் இந்தி மொழி தேர்வுக்கு 15 மதிப்பெண்களும், பிரிவு பி – இளநிலை மொழிபெயர்ப்பாளர் பணிக்கு மொத்த மதிப்பெண்கள் 300ல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுகளுக்கு 200 மதிப்பெண்களும், பிரிவு சி – கணக்காளர் பணிக்கு மொத்த மதிப்பெண்கள் 300ல் இந்தி மற்றும் ஆங்கில மொழி தேர்வுகளுக்கு 40 மதிப்பெண்களும், பிரிவு சி – இளநிலை கணக்காளர் பணிக்கு மொத்த மதிப்பெண்கள் 240ல் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மற்றும் இலக்கியம் தொடர்பான தேர்வுகளுக்கு 40 மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. இது இந்தியாவின் அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. எனவே, இந்தி மொழி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி இழைக்கும் இந்த தேர்வு முறையை மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துளளார். இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

The post ஒன்றிய அரசின் பணியிட தேர்வுமுறையால் இந்தி பேசாத மாநில தேர்வர்களுக்கு அநீதி: மதுரை எம்.பி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: