2வது முறையாக சாம்பியன் பட்டம்; இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

பிரிட்ஜ்டவுன்: 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிட்ஜ்டவுனில் நேற்றிரவு நடந்த இறுதி போட்டியில் நம்பர் 1 அணியான இந்தியா-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. ரோகித்சர்மா 9, ரிஷப் பன்ட் 0, சூர்யகுமார் 3 ரன்னில் வெளியேற அதிகபட்சமாக விராட் கோஹ்லி 76 (59 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அக்சர் பட்டேல் 47 ரன் (31 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அடித்தனர். ஷிவம் துவே 27 ரன் எடுத்தார். 20 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் தலா 4 ரன்னில் வெளியேற, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன் (21 பந்து) அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் டிகாக் 39 ரன்னில் கேட்ச் ஆனார். கிளாசென் 27 பந்தில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 52 ரன் விளாசி மிரட்டினார். கடைசி 5 ஓவரில் 30 ரன் மட்டுமே தேவைப்பட பாண்டியா வீசிய ஓவரில் கிளாசென் கேட்ச் ஆனார். இதன்பின்னர் போட்டி இந்தியா பக்கம் திரும்பியது. 18வது ஓவரில் பும்ரா 2 ரன்மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். அடுத்த ஓவரில் அர்ஷ்தீப் சிங் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க கடைசி ஓவரில் தெ.ஆ. வெற்றிபெற 16 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய பாண்டியா முதல் பந்தில் டேவிட் மில்லரை அவுட் ஆக்கினார். பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் பிரமாதமாக கேட்ச் பிடித்தது மெய்சிலிர்க்க வைத்தது. 20 ஓவரில் தென்ஆப்ரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருதும், தொடரில் 15 விக்கெட் எடுத்த பும்ரா தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: கடந்த 3, 4 ஆண்டாக அடைந்த தோல்விகளுக்கு பின் இறுதியாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. இதனை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. தனித்தனியாகவும், ஒரு அணியாகவும் இணைந்து கடினமாக உழைத்தோம். இந்த வெற்றிக்கு பின் ஏராளமான விஷயங்கள் உள்ளது. இது வெறும் இன்றைய நாளுக்கானது மட்டுமல்ல. கடந்த 3-4 ஆண்டுகளுக்கான உழைப்பின் ஊதியமாக நினைக்கிறேன். ஒருகட்டத்தில் ஆட்டம் தென்ஆப்ரிக்கா பக்கம் சென்றதை உணர்ந்தேன். ஒரு அணியாக ஐசிசி தொடரின் வெற்றி எங்களுக்கு தேவையாக இருந்தது. வீரர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளோம். கோஹ்லியின் பார்ம் குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அவரின் தரம் எங்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக உச்சத்தில் இருக்கும் வீரர். முக்கியமான தருணங்களில் தான் ஜாம்பவான் வீரர்கள் முன் நிற்பார்கள்.

கோஹ்லி ஒருமுனையில் நின்று ஆடியதால், மற்றவர்கள் அவரை சுற்றி விளையாட முடிந்தது. இறங்கிய உடனே அதிரடியாக விளையாடும் வகையிலான பிட்ச் அல்ல இது. நீண்ட நேரம் விளையாடி ரன் சேர்க்க வேண்டிய பிட்ச். அதனை கோஹ்லி சிறப்பாக செய்துள்ளார். அதனை அவரின் அனுபவத்தின் மூலம் செய்து காட்டியுள்ளார். அக்சரின் 47 ரன்னும் மிக முக்கியமானது. பும்ராவின் பவுலிங்கை பற்றி வார்த்தைகளில் சொல்ல முயற்சிக்கிறீர்கள். எனக்கு அவரிடம் என்ன இருக்கிறது என்று தெரியாது. அவரால் என்ன செய்ய முடியும் என்று நன்றாக தெரியும். அவரின் திறமை மீது அவருக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அதனை தான் பவுலிங்கில் வெளிப்படுத்துகிறார். கடைசி ஓவரை ஹர்திக் மிகச்சிறப்பாக வீசினார். இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். ரசிகர்களுக்கும் சல்யூட் சொல்லி கொள்கிறேன். இந்தியாவில் கண் விழித்து பார்த்து கொண்டாடுபவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் எத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறோமோ, அதேபோல் இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த கொண்டாட்டத்திற்காக காத்திருக்கிறார்கள், என்றார்.

ராகுல் டிராவிட்டை கொண்டாடிய வீரர்கள்: 2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணியின் கேப்டனாக இருந்து தோல்வியை எதிர்கொண்ட ராகுல் டிராவிட், இம்முறை பயிற்சியாளராக இருந்து டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி போட்டியில் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை வென்று அசத்தியுள்ளார். இதனால் பார்படாஸ் மைதானத்திலேயே இந்திய அணி வீரர்கள் அனைவரும் இணைந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை சிறு குழந்தையை போல் தூக்கி கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களுக்கு வழிவிட இதுதான் சிறந்த நேரம்: ஆட்டநாயகன் கோஹ்லி கூறியதாவது: இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். இதனை தான் சாதிக்க விரும்பிவோம். சில நேரங்களில் நம்மால் ரன் சேர்க்க முடியாது என்று நினைத்திருந்த போது, இதுபோன்ற விஷயங்கள் நடக்கும். கடவுளுக்கு நன்றி. இப்போது இல்லை என்றால் எப்போது என்ற சூழலில் இருந்தோம். நான் இந்திய அணிக்காக விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். அதனால் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஒருவேளை தோல்வியடைந்திருந்தால், வெளிப்படையாக சொல்லியிருக்க மாட்டேன். டி20 கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு இளைஞர்கள் கொண்டு செல்ல இதுதான் சரியான நேரம். என்றார்.

நான் என்றுமே அழுத்தத்தை விரும்புபவன்: ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூறியதாவது: இந்த வெற்றி எனக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது. இன்று ஒட்டுமொத்த தேசமும் எது வேண்டும் என்று நினைத்ததோ, அது தற்போது கிடைத்துவிட்டது. எனது வாழ்க்கையில் கடந்த 6 மாதம் அவ்வளவு விஷயங்கள் நடந்துவிட்டது. ஆனால் இது குறித்து ஒரு வார்த்தை கூட நான் வெளியே பேசவில்லை. கிடைத்த வாய்ப்பை நான் சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். நான் என்றுமே அழுத்தத்தை விரும்புகின்றவன். பயிற்சியாளர் டிராவிட்டுக்கு இதுபோல ஒரு பிரியாவிடை தான் அவருக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒரு பயிற்சியாளர் என்ற முறையில் தாண்டி இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம், என்றார். பாண்டியாவுக்கு ரோகித்சர்மா முத்தமிட்டு மகிழ்ந்தார்.

கோஹ்லியை தொடர்ந்து ரோகித்சர்மாவும் ஓய்வு: விராட் கோஹ்லியை தொடர்ந்து கேப்டன் ரோகித்சர்மாவும் சர்வதேச டி.20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2007ம் ஆண்டு டி.20 உலக கோப்பையில் அறிமுகமாக ரோகித்சர்மா 159 போட்டிகளில் 4231 ரன் எடுத்துள்ளார். டி.20 போட்டியில் 5 சதம் விளாசி மேக்ஸ்வெலுடன் முதலிடம், 205 சிக்சர் அடித்து முதலிடத்தில் உள்ளார். டி.20 போட்டியில் ஓய்வை அறிவித்தாலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என ரோகித் தெரிவித்துள்ளார்.

இதைவிட சிறந்த உணர்வு கிடையாது: தொடர் நாயகன் பும்ரா கூறுகையில், வழக்கமாக எமோஷனை ஓரமாக வைத்துவிட்டு, அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பணியை தொடங்கிவிடுவேன். ஆனால் இன்று எனக்கு பேசவே வார்த்தைகள் வரவில்லை. எந்தவொரு போட்டிக்கு பின்னரும் இதுவரை கண்ணீர் சிந்தியது கிடையாது. ஆனால் இப்போது எமோஷனலாக உள்ளது. நாங்கள் போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்து, எப்படியோ வென்றுள்ளோம். எனது குடும்பம் இங்குதான் உள்ளது. கடந்த முறை அரையிறுதி வரை வந்து தோல்வியடைந்தோம். இம்முறை இறுதிப்போட்டியில் வென்றுள்ளோம். இதனைவிட சிறந்த உணர்வு எதுவும் கிடையாது, என்றார்.

The post 2வது முறையாக சாம்பியன் பட்டம்; இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: