கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் மனசாட்சியை தொட்டு ஆலோசனை வழங்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்

பேரவையில் நேற்று வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: மதுவிலக்கு சட்டதிருத்த மசோதாவில் 1937ம் ஆண்டுக்கு பிறகு எந்த திருத்தமும் செய்யப்படாமல் இருந்தது. முதல்வர், கள்ளக்குறிச்சி சம்பவத்தை வைத்து இவ்வளவு கடுமையான சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இதற்கு காரணம், இதுபோன்ற சம்பவம் இனி நடக்க கூடாது என்பதற்காகத்தான். முதல்வர் தனியாக ஒரு கமிட்டி அமைத்துள்ளார்.

இதை ஆய்வு செய்து இன்னும் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அது எடுக்கப்படும். இந்த திருத்த மசோதா அவசரகாலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் அதிகமாக கவனத்தை எடுத்து கமிட்டி தரும் தகவல் அடிப்படையில் மேலும் திருத்தங்கள் கொண்டு வரப்படும். வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி அரசியல் ரீதியாக சிலர் கருத்துக்களை பேசுகிறார்கள்.

ஆனால், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க ஆலோசனை வழங்க வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். பூரண மதுவிலக்கு வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினார்கள். எங்களுக்கு அதில் விருப்பம் இருக்கிறது. ஆனால் சூழ்நிலை என்ன என்று உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைக்கப்படும் என்று முதல்வர் சொன்னார். அதுபோல் குறைக்கப்பட்டு இருக்கிறது. அப்படி செய்தால் இங்கே குடிப்பவர்கள் பக்கத்து கடைக்கு செல்கிறார்கள்.

அங்கு 50 பேர் வாங்கி வந்த நிலையில் தற்போது 100ஆக உயர்ந்துள்ளது. இது நடைமுறையில் இருக்கிற சிக்கல். இதைச் சொன்னால் எங்களை தவறாக பேசுகிறார்கள். காலையில் போய் மது வாங்கி செல்கிறார்கள் என்று சொன்னேன். அவர்களை நான் பெரிதாக குற்றம் சொல்லவில்லை. அப்படி நான் சொன்னது பற்றி தவறாக பேசினார்கள். யார் காலையில் கடைக்கு போகிறார்கள் என்று மனசாட்சியை தொட்டு பார்த்து சொல்ல வேண்டும். அவர்களை நாம் எப்படி வெளியில் கொண்டு வருவது? இதையெல்லாம் பார்த்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். இந்த சட்டதிருத்தம் அதை கடுமையாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் மனசாட்சியை தொட்டு ஆலோசனை வழங்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: