குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறந்துவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. மலையோர பகுதிகளில் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 52.4 மி.மீ மழை பெய்திருந்தது.

இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.7 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3511 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 636 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மேலும் அணையில் இருந்து 3008 கன அடி தண்ணீர் உபரியாக மறுகாலில் திறந்துவிடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.27 அடியாகும். அணைக்கு 2133 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலையில் அணை நீர்மட்டம் 72 அடியை கடந்தது.

இதனை தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், ஆற்றில் குளிப்பது, கன்றுகாலிகளை குளிப்பாட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிற்றார்-1ல் 16.66 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 320 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில், 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 16.76 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 15.8 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 44.54 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு 9 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.9 அடியாகும்.

The post குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: