தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று, நிறைவேற்றுவதற்காக கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 29ம் தேதி (நேற்று) வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை 7 நாட்கள் காலை மற்றும் மாலையிலும் பேரவை கூட்டம் நடைபெற்றது.
நேற்று (29ம் தேதி) காவல், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறைகள் மீது நடைபெற்ற விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசும்போது, ‘‘இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி மொத்தம் 17 நாட்கள் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

மானிய கோரிக்கை மீதான கூட்டத்தொடர் 9 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக நேரம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என்றார். பின்னர் அவை முன்னவர் துரைமுருகன், ‘‘பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும் என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்’’ என்றார். இந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ‘‘பேரவை மீண்டும் கூடும் நாள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக’’ சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

* 9 நாட்களில் 22 சட்ட திருத்த மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழக சட்டப்பேரவை கடந்த 20ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்கள் கூடியது. இந்த கூட்ட தொடரில் அனைத்து துறைகளின் மானிய கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பேரவையில் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா உள்பட 22 சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் நேற்று இறுதி நாளில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த பேரவை கூட்ட தொடரில் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

The post தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: