பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார்


ஆலந்தூர்: பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி என்ற தலைப்பில், 2 நாள் கருத்தரங்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் விஜடி வேந்தர் ஜி.விசுவநாதன், சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், எத்திராஜ் கல்லூரி துணை வேந்தர் மைக் முரளிதரன், தென்னிந்தியாவின் துணை தூதர்கள் டேவிட் எக்லெஸ்டன், சரவண குமார், ரஷ்ய நாட்டின் தூதர் செர்ஜிவி அசாரோவ் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பேசினர். 2வது நாளாக நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்றவர்களை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தால் முன்னேற்றம் காணலாம் என்பது குறித்து விளக்கி பேசினர், இதனைதொடர்ந்து, வெங்கட்ரங்கன் திருமலை, லட்சுமணன், சேது ஆகியோர் பேசினர்.

இந்த கருத்தரங்கில் அப்துல் கலாமின் பேரன் சேக்தாவூத், மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடியபோது, ஒரு மாணவன் ‘‘எங்களுடைய பெற்றோர் இன்ஜினியரிங் படிப்பதையே விரும்புகிறார்கள். எங்களுக்கு அதில் விருப்பமில்லை. இதைப் பெற்றோர்களுக்கு நீங்கள் விளக்க வேண்டும்,’’ என்றார். அதற்கு சேக்தாவூத் கூறுகையில், ‘‘மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தெளிவாக பேசி தங்களுக்கு விருப்பமான படிப்பை தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் அதிக பணம் சம்பாதிப்பதற்காக அப்படி சொல்கிறார்கள். மற்ற படிப்பிலும் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதை நீங்கள் தான் உங்கள் பெற்றோர்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து, மாலையில் நடந்த நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் விஐடி பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.வி.செல்வம் கலந்துகொண்டு, கருத்தரங்கில் பங்கேற்ற 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரி தலைவர் கார்த்திகேயன், ஜோகா கார்பரேஷன் முதன்மை அதிகாரி சார்லஸ் காட்வின், இசி குரூப் முதன்மை அதிகாரி, டேனியல் ஜேக்கப் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

The post பன்னாட்டு தமிழ் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு நிறைவு;400 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்: விஐடி துணை வேந்தர் ஜி.வி.செல்வம் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: